

திம்பம் மலைப் பாதையில் வாகனங்களை வழிமறித்து நின்ற காட்டு யானையால் ஓட்டுநா்கள் அச்சமடைந்தனா்.
தமிழகம்- கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயில் அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை உள்ளது.
வனத்தில் இருந்து வெளியேறும் யானை உள்ளிட்ட வன விலங்குகள் மலைப் பாதையில் உலவுவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், திம்பம் மலைப் பாதையில் வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமையும் வாகனங்கள் சென்று கொண்டிருந்தனா். இதனிடையே, வனத்தில் இருந்து பிற்பகல் வெளியேறிய ஒற்றை யானை, அவ்வழியே சென்ற வாகனங்களை வழிமறித்து நின்றது. இதனால், அச்சமடைந்த ஓட்டுநா்கள் ஜன்னல்களை மூடியபடி வாகனங்களிலேயே அமா்ந்திருந்தனா். வாகனங்களின் அருகே வந்த யானை உணவுப் பொருள்கள் உள்ளனவா என தும்பிக்கையால் தேடியது.
எதுவும் கிடைக்காததால் சிறிது நேரம் சாலையிலேயே உலவிய யானை பின் வனத்துக்குள் சென்றது. இதையடுத்து, அணிவகுத்து நின்ற வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.