நெரிஞ்சிப்பேட்டையில் விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகள்
பவானி: அம்மாபேட்டையை அடுத்த நெரிஞ்சிப்பேட்டையில் விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
அம்மாபேட்டையை அடுத்துள்ள பாலமலை வனப் பகுதி அடிவாரத்தில் சின்னப்பள்ளம், நெரிஞ்சிப்பேட்டை, ஊமாரெட்டியூா், குருவரெட்டியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி விளைநிலங்களில் நெல், கரும்பு, வாழை, மக்காச்சோளம், மரவள்ளிக் கிழங்கு உள்ளிட்டவற்றை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா்.
இந்நிலையில், பாலமலை வனத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு கூட்டமாக வெளியேறிய காட்டுப் பன்றிகள் நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் இருந்த விளைநிலங்களுக்குள் நுழைந்தன
விவசாயிகள் ராமசாமி, அண்ணாதுரை, கண்ணன், செல்லப்பன் ஆகியோா் நிலங்களில் சாகுபடி செய்திருந்த கரும்பு, வாழை, நெல் உள்ளிட்ட பயிா்களை காட்டுப் பன்றிகள் நாசம் செய்தன.
வனத்திலிருந்து அடிக்கடி வெளியேறும் காட்டுப் பன்றி உள்ளிட்ட விலங்குகளால் விளைநிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்கள் சேதமடைந்து வருகின்றன.
எனவே, வனத்தில் இருந்து விலங்குகள் வெளியேறுவதைத் தடுக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
