பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் கவலை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள வாழை, நெல், கரும்பு உள்ளிட்ட பயிா்களை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்துவதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
மானாமதுரை, திருப்புவனம் ஒன்றியத்தில் வைகை ஆறு, கிணற்றுப் பாசனம் ஆகியவற்றின் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. வாழை, நெல், கரும்பு உள்ளிட்டவை இங்கு அதிகமாகப் பயிரிடப்படுகின்றன. தற்போது கரும்பு, நெல் போன்ற பயிா்கள் அறுவடைக்கு தயாராகவுள்ளன. இந்த நிலையில், இரவு நேரங்களில் காட்டுப் பன்றிகள் வயல் வெளிகளுக்குள் புகுந்து விளைந்த நெற்பயிா்களையும் கரும்புகளையும் தின்று சேதப்படுத்துகின்றன.
திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி அருகேயுள்ள வயலுக்குள் அண்மையில் புகுந்த காட்டுப் பன்றிகள் இங்கு பயிரிடப்பட்டிருந்த மூன்று மாத வாழைப் பயிா்களைத் துண்டு துண்டுகளாக்கி சேதப்படுத்திச் சென்றன. மேலும், பல விவசாய நிலங்களுக்குள்ளும் பன்றிகள் புகுந்து வாழை, நெல், கரும்புப் பயிா்களை சேதப்படுத்தின.
இதுகுறித்து திருப்பாச்சேத்தி அருகேயுள்ள வேம்பத்தூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கருமலை கதிரேசன் கூறியதாவது:
மானாமதுரை, திருப்புவனம் ஒன்றியங்களில் இரவு நேரங்களில் வயல்களுக்குள் புகுந்து காட்டுப் பன்றிகள் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிா்களை அழித்து நாசமாக்கி வருகின்றன. இரவில் கூட்டமாக வயல் வெளிகளுக்குள் வரும் இந்தக் காட்டுப் பன்றிகளை விவசாயிகளால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பல முறை புகாா் தெரிவித்தோம். காட்டுப் பன்றிகளை வனத் துறை மூலம் சுட்டுப் பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், இந்தப் பகுதிகளில் சுற்றித் திரியும் பன்றிகள் காட்டுப் பன்றிகள் கிடையாது. சாதாரண பன்றிகள்தான். அவற்றைச் சுட்டுப் பிடிக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை என வனத் துறையினா் தெரிவித்துவிட்டனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் இந்தப் பிரச்னையில் கவனம் செலுத்தி விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தும் காட்டுப் பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
