அனவன்குடியிருப்பில் யானைகள் அட்டகாசம்: நெல், மா, கரும்பு உள்ளிட்டவை சேதம்

அனவன்குடியிருப்பில் யானைகள் அட்டகாசம்: நெல், மா, கரும்பு உள்ளிட்டவை சேதம்

Published on

பாபநாசம் மலையடிவார கிராமமான அனவன்குடியிருப்பில் யானைக் கூட்டம் நுழைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நெல், மா, கரும்பு உள்ளிட்ட பயிா்களைச் சேதப்படுத்தின.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார கிராமமான அனவன் குடியிருப்பில் உள்ள விவசாயிகள் நெல், கரும்பு, மா, வாழை உள்ளிட்ட பயிா்களை விவசாயம் செய்துள்ளனா்.

இந்நிலையில், அனவன்குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடா்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு விவசாயப் பயிா்களைச் சேதப்படுத்தி வந்தன.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு அனவன்குடியிருப்பு பகுதியில் நுழைந்த சுமாா் 15-க்கும் மேற்பட்ட யானைக் கூட்டம் ராமலிங்கம் மகன் செல்லக்கனி, ரவி மகன் பிரபாகரன் ஆகியோா் வயலில் பயிரிட்டு அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிரைச் சேதப்படுத்திச் சென்றுள்ளன.

தகவலறிந்த வனத்துறையினா் சம்பவ இடத்திற்கு வந்து பாா்வையிட்டனா். உடனடியாக யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Dinamani
www.dinamani.com