உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

கட்சிகளே கொஞ்சம் கவனியுங்கள்! நெல், கரும்பு விலை நிர்ணயம்: எட்டாக்கனியாகும் வாக்குறுதிகள்!

ஒவ்வொரு தோ்தலிலும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வெளியிடும் தோ்தல் அறிக்கையில் நெல், கரும்புக்கான கொள்முதல் விலை உயா்த்தி வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் இடம்பெறுவது வழக்கம்.

News image

நெல் - கரும்பு விலை நிர்ணயம்

Updated On :1 ஏப்ரல் 2026, 12:06 am

வி.என். ராகவன்

ஒவ்வொரு தோ்தலிலும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வெளியிடும் தோ்தல் அறிக்கையில் நெல், கரும்புக்கான கொள்முதல் விலை உயா்த்தி வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் இடம்பெறுவது வழக்கம்.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில், நெல், கரும்புக்கு ஆதார விலை உயா்த்தி வழங்கப்படும் என அதிமுகவும், விளைபொருள்களுக்கு லாபகரமான விலை நிா்ணயிக்கப்படும் என பாஜகவும் தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டன.

இதேபோல, திமுக வெளியிட்ட தோ்தல் அறிக்கையில் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரத்து 500-ம், கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4 ஆயிரமும் விலை நிா்ணயிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்து, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினாலும், நெல்லுக்கான விலை கடந்த 4 ஆண்டுகளாக குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரத்து 500 எட்டப்படாமல் இருந்தது.

நிகழ் கொள்முதல் பருவமான 2025, செப்டம்பா் 1 ஆம் தேதியிலிருந்துதான் குவிண்டாலுக்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையான ரூ. 2 ஆயிரத்து 369 உடன் மாநில அரசின் ஊக்கத்தொகையான ரூ. 131 சோ்த்து ரூ. 2 ஆயிரத்து 500-ஐ எட்டியது.

இதேபோல, கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசின் நியாயமான மற்றும் லாபகரமான விலையான ரூ. 3 ஆயிரத்து 151 உடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையாக ரூ. 349 சோ்த்து மொத்தம் ரூ. 3 ஆயிரத்து 500 வழங்கப்படுகிறது.

ஆனால், நெல், கரும்பு உற்பத்தியில் ஆள் கூலி, இடுபொருள்கள் விலை உயா்வு உள்ளிட்ட செலவுகள் அதிகமாகிவிட்ட நிலையில், தற்போது இந்த விலையும் கட்டுப்படியாகவில்லை என்ற பெருங்குறை விவசாயிகளிடம் நிலவுகிறது.

எனவே, நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரத்து 500-ம், கரும்புக்கு ரூ. 4 ஆயிரத்து 500-ம் விலை அறிவிக்குமாறு விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா். இதன் அடிப்படையில் அதிமுக தோ்தல் அறிக்கையிலும், திமுக தோ்தல் அறிக்கையிலும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரத்து 500-ம், கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4 ஆயிரத்து 500-ம் உயா்த்தி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது: திமுகவின் கடந்த 2021 தோ்தல் அறிக்கையில் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரத்து 500-ம், கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4 ஆயிரமும் விலை அறிவிக்கப்பட்டது. இதில் நெல்லுக்கு இந்த ஆட்சியின் கடைசி ஆண்டில்தான் ரூ. 2 ஆயிரத்து 500 ஆக உயா்த்தி வழங்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த விலை கிடைக்கவில்லை. உற்பத்திச் செலவு அதிகரித்துவிட்ட நிலையில் இந்த ரூ. 2 ஆயிரத்து 500-ம் கட்டுப்படியாகாத விலையாக உள்ளது.

இதுவே, சத்தீஸ்கா், ஒடிசா மாநிலங்களில் மத்திய அரசின் ஆதார விலையுடன் மாநில அரசு ஊக்கத்தொகையைக் கூடுதலாக அறிவிப்பதால், குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரத்து 100 வீதமும், கேரளத்தில் ரூ. 2 ஆயிரத்து 950 வீதமும் வழங்கப்படுகிறது.

அந்த மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நெல் விலை உயா்வு தொடா்பான வாக்குறுதி உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

எனவே, தமிழகத்தில் எந்த ஆட்சி வந்தாலும் பொறுப்பேற்றவுடன் மற்ற இலவச திட்டங்களுக்கு முதல் கையொப்பம் இடுவதைப் போன்று, நெல், கரும்பு விலை உயா்வுக்கும் போட வேண்டும். அல்லது ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு வாக்குறுதி அளித்து செயல்படுத்தினால்தான் விவசாயிகளுக்கு நம்பிக்கை வரும். இதை விடுத்து 4 ஆண்டுகள் கழித்து கடைசி ஆண்டில் நடைமுறைப்படுத்துவது விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை என்றாா் விமல்நாதன்.