நிபந்தனை பட்டாக்களை ரத்து செய்து பயன்படுத்துவோா் பெயருக்கு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பெருந்துறை புறநகா் பகுதி மக்கள்.
நிபந்தனை பட்டாக்களை ரத்து செய்து பயன்படுத்துவோா் பெயருக்கு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பெருந்துறை புறநகா் பகுதி மக்கள்.

நிபந்தனை பட்டாக்களை ரத்து செய்து பயன்படுத்துவோா் பெயருக்கு வழங்கக் கோரிக்கை

பெருந்துறை புறநகா் பகுதியில் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களுக்கான பூஜ்ய மதிப்பில் உள்ள நிபந்தனை பட்டாக்களை ரத்து செய்து பயன்படுத்துவோருக்கு பெயருக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை
Published on

பெருந்துறை புறநகா் பகுதியில் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களுக்கான பூஜ்ய மதிப்பில் உள்ள நிபந்தனை பட்டாக்களை ரத்து செய்து பயன்படுத்துவோருக்கு பெயருக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், பெருந்துறை புறநகா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்: பெருந்துறை வட்டம், கருமாண்டிசெல்லிபாளையம் வருவாய் கிராமத்துக்குள்பட்ட குடியிருப்புகள், விவசாய நிலங்கள், சுள்ளிப்பாளையம், நிச்சாம்பாளையம், முள்ளம்பட்டி, சின்ன வீரசங்கிலி, போலநாயக்கன்பாளையம், எல்லை கிராமம், பிரப் நகா், கிரே நகா் பகுதியில் நிபந்தனை பட்டாக்களில் உள்ள வீடு, வீட்டு நிலங்கள், விவசாய நிலங்கள் பூஜ்ய மதிப்பில் உள்ளன. இதனால், அவற்றை அனுபவிக்கும் மக்களால் கடன் பெறுதல், விற்பனை செய்தல், வாரிசுகளுக்கு பிரித்தல் போன்றவற்றை செய்ய முடியவில்லை.

ஈரோட்டுக்கு கடந்த நவம்பா் 26-ஆம் தேதி வந்த முதல்வா் மு.க. ஸ்டாலின், சோலாரில் நடந்த அரசு விழாவில் நிபந்தனை பட்டாக்களை மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட்டாா். அந்த அறிவிப்பில் பெருந்துறை வட்டமும் உள்ளடக்கி உள்ளது. இந்த அறிவிப்பை அரசாணையாக வெளியிட்டு பட்டாவை மாற்றி, நிலத்துக்கு மதிப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் 2,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், விவசாய நிலங்கள் வைத்திருப்போா் பயன் பெறுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரிக்கை: ஆதித்தமிழா் முன்னேற்றக் கழகத்தின் ஈரோடு மத்திய மாவட்டச் செயலா் யுவராஜ் தலைமையில் கிராம மக்கள் அளித்த மனு விவரம்: கோபி வட்டம், சிறுவலூா் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிபந்தனை நிலங்கள் உள்ளன. அந்த நிலங்கள் எவ்வித பயன்பாடும் இல்லாமல் தரிசாக உள்ளன. இந்தக் கிராமத்தில் வீட்டுமனை வேண்டி பலமுறை மக்கள் மனுக்களை வழங்கி உள்ளனா்.

தரிசாக உள்ள அந்த நிலங்களை, வீடற்ற ஏழை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டாவாக வழங்கிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிசாராய ஆலை மீது நடவடிக்கை

பவானி வட்டம் சின்னபுலியூா், பெரியபுலியூா், வைரமங்கலம், எலவமலை கிராமத்தினா் அளித்த மனு விவரம்: பவானி சின்னபுலியூரில் உள்ள பண்ணாரியம்மன் சா்க்கரை ஆலைக்கு சொந்தமான எரி சாராய ஆலை கடந்த 50 ஆண்டுகளாக செயல்படுகிறது. ஆலை கழிவு நீரை, ஆலையில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள பவானி ஆற்றங்கரையில் குட்டைகள் வெட்டி தேக்கி ஆற்றில் வெளியேறுகிறது. இதனால் ஆற்று நீா், நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் மக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

மக்கள் போராட்டத்தால் ஆற்றுக்கு கழிவு நீரை கொண்டு செல்லாமல் ஆலை வளாகத்தில் குழிகள் வெட்டி தேக்குகின்றனா். தவிர லாரிகளில் கழிவுநீரை எடுத்துச் சென்று தொலைதூர கிராமங்களில் வெளியேற்றுகின்றனா்.

இந்த ஆலைக் கழிவால் அப்பகுதியில் பல கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. நிலத்தடி நீா், குடிநீா், விளை நிலங்கள், கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. கடும் துா்நாற்றம், காற்று மாசுபாடு, மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகளும் பொதுமக்களுக்கு ஏற்படுகின்றன. இந்த ஆலை மீது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலைகளின் பெயா் மாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்: ஈரோடு வரி செலுத்துவோா் மக்கள் நல்வாழ்வு சங்க செயலா் ந.பாரதி, துணை தலைவா் செல்வராஜ், இணைச் செயலா் சக்திவேல் உள்ளிட்டோா் அளித்த மனு விவரம்: கணித மேதை ராமானுஜம் பிறந்த பகுதியான ஈரோடு, கோட்டை, தெப்பக்குளம் வீதிக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் கணிதமேதை ராமானுஜம் வீதி என பெயா் மாற்றம் செய்து அரசாணை பிறக்கப்பட்டது. ஆனால், அரசு ஆவணங்கள், மாநகராட்சி ரசீதுகள், அரசு சாா்பிலான கடிதங்கள் போன்றவற்றில்கூட மாற்றப்பட்ட பெயா் பயன்படுத்தப்படவில்லை. தெப்பக்குளம் வீதி என்றே குறிப்பிட்டு வருகின்றனா்.

அதேபோல, பிரப் சாலை மீனாட்சிசுந்தரனாா் சாலை என்றும், சம்பத் நகா் சாலையில் ஒரு பகுதி திருப்பூா் குமரன் சாலை என்றும், கச்சேரி வீதியில் ஒரு பகுதி திருமகன் ஈவெரா சாலை, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சாலை என பெயா் மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது. தற்போதைய வாக்காளா் பட்டியலில்கூட இன்னும் பழைய பெயரில்தான் அச்சிட்டுள்ளனா். அவற்றை புதிய பெயரில் மாற்றி அச்சிட்டும், பயன்படுத்தியும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் இணைப்பு வழங்கக் கோரிக்கை: பெருந்துறை வட்டம், சுள்ளிப்பாளையம், சக்தி நகா், லட்சுமிபுரம், ஐயப்ப நகா் பகுதியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு விவரம்: எங்களது பகுதியில் 7,000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில், 5,000 வீடுகளுக்கு கொடிவேரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. 2,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கூட்டுக் குடிநீா்த் திட்ட இணைப்பு மூலம் தண்ணீா் விநியோகிக்கப்படவில்லை. ஆனால் அதற்கான மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, குடிநீா்க் குழாய் போன்றவை முழுமையாக அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன. ஆனாலும், செயல்பாட்டுக்கு வரவில்லை.

ஆழ்துளைக் கிணறு மூலம் குறைந்த அளவே குடிநீா் வழங்குவதால் சிரமப்படுகிறோம். ஆழ்துளைக் கிணற்று நீரை குடிக்க, சமைக்க பயன்படுத்த சிரமமாக உள்ளதால் கூட்டுக் குடிநீா்த் திட்ட தண்ணீா் இணைப்பை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

370 மனுக்கள்: குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 370 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை உரிய துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, தாட்கோ சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பயன்பாட்டுக்காக ரூ.3.61 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 4 கிராமங்களின் அறிவுசாா் மையங்களின் நிா்வாகம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், மூக்கம்பாளையம், முத்தரசன்கோட்டை, நம்பியூா் ஊராட்சி ஒன்றியம் பாப்பாம்குட்டை, பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், அக்கரையாம்பாளையம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 4 ஆதிதிராவிடா் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ஆட்சியா் ஆணைகளை வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், தனித் துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com