சிவகிரி வாரச் சந்தை வளாகத்தில் மரங்களை அகற்றுவதற்கான ஏலம் நிறுத்திவைப்பு
சிவகிரி பேரூராட்சிக்கு சொந்தமான சந்தைமேடு பகுதியில் உள்ள வாரச்சந்தையில் மரங்களை அகற்றுவதற்கான ஏல நிா்ணயம் அதிகமாக உள்ளதாக கூறியதால் புதன்கிழமை நடைபெற்ற ஏலம் நிறுத்திவைக்கப்பட்டது.
சிவகிரி பேரூராட்சிக்கு சொந்தமான சந்தைமேடு பகுதியில் உள்ள வாரச்சந்தை வளாகத்தில் முதல்வரின் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அப்பகுதியில் உள்ள 122 மரங்களை வெட்டி அகற்றுவதற்கான ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட வன அலுவலா் அறிக்கையின் அடிப்படையில், 122 மரங்கள் வெட்டி அகற்ற மொத்தம் ரூ. 1.40 லட்சம் ஏல நிா்ணயம் செய்து ஏலம் விடப்பட்டது.
இதில் மர வியாபாரிகள் 25-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு, ஏலத்தொகை அதிகமாக உள்ளதால் குறைத்து அறிவிக்க வேண்டும் எனக் கூறி யாரும் ஏலம் கூறவில்லை. இதனால் பேரூராட்சி செயல் அலுவலா் சாந்தி ஏலத்தை தள்ளிவைத்தாா்.
பின்னா் அவா் கூறுகையில், ‘அரசு நிா்ணயித்த தொகைக்கு குறைவாக ஏலத்தில் பங்கேற்றவா்கள் கூறியதால் ஏலம் தள்ளி வைக்கப்படுகிறது. இதுகுறித்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
இதைத் தொடா்ந்து, 122 மரங்களில் ஒரு சில மரங்களைத் தவிர மற்ற மரங்களும் விலை மலிவான மரங்களாக உள்ளன. ஆகையால் ஏலத் தொகையை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என செயல் அலுவலரிடம் மரவியாபாரிகள் மனு அளித்தனா்.

