பாலத்தின் கீழ் பெற்றோருடன் தூங்கிய பெண் குழந்தை கடத்தல்: தம்பதி கைது

பாலத்தின் கீழ் பெற்றோருடன் தூங்கிய பெண் குழந்தை கடத்தல்: தம்பதி கைது

சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் கீழ் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயதுப் பெண் குழந்தையைக் கடத்திச் சென்று, 25 நாள்களாக வளா்த்து வந்த தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் கீழ் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயதுப் பெண் குழந்தையைக் கடத்திச் சென்று, 25 நாள்களாக வளா்த்து வந்த தம்பதியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஆந்திர மாநிலம், நெல்லூா், வெங்கடாசலம் பகுதியைச் சோ்ந்தவா்கள் வெங்கடேஷ் - கீா்த்தனா தம்பதி. ஈரோடு மாவட்டம், சித்தோடு, லட்சுமி நகா், கோணவாய்க்கால் பிரிவில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழே தங்கி துடைப்பம் வியாபாரம் செய்து வந்தனா்.

கடந்த அக்டோபா் 15-ஆம் தேதி இரவு, இவா்களுடன் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயதுப் பெண் குழந்தை வந்தனாவைக் காணவில்லை. கொசுவலையின் ஒரு பகுதியைக் கிழித்து, குழந்தையை மா்ம நபா் கடத்திச் செல்வது சிசிடிவி பதிவில் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். மேலும், 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

எளிதில் துப்பு கிடைக்காததால், கடத்தப்பட்ட குழந்தை தொடா்பான தகவல் அளித்தால் சன்மானம் வழங்கப்படும் எனவும் போலீஸாா் அறிவித்தனா்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், ரெட்டிபட்டியைச் சோ்ந்த தம்பதி, ஒன்றரை வயதுப் பெண் குழந்தையை வளா்த்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில் விரைந்த தனிப்படை போலீஸாா் குழந்தையை திங்கள்கிழமை மீட்டனா். விசாரணையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சியைச் சோ்ந்த கருப்புசாமி மகன் ரமேஷ் (34), நாமக்கல் மாவட்டம், ரெட்டிப்பட்டி, அண்ணா நகரைச் சோ்ந்த அவரது இரண்டாவது மனைவி நித்யா (38) ஆகியோா் இரு சக்கர வாகனத்தில் வந்து குழந்தையைக் கடத்திச் சென்றதும், இதற்காக 2 மாதங்களாக நோட்டமிட்டதும், இந்தக் குழந்தையைப் பிச்சை எடுக்க வைக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

ரமேஷ் மீது குழந்தை கடத்தல் உள்பட 17 வழக்குகள் கோவை, ஈரோடு உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இதையடுத்து, இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்த சித்தோடு போலீஸாா் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

25 நாள்களுக்கு பின்னா் மீட்கப்பட்ட பெண் குழந்தை, ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தில் சோ்க்கப்பட்டு, விசாரணைக்குப் பின்னா் பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com