கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது
கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய பிறகு மதுபோதையில் அங்கேயே மயங்கிக் கிடந்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.
கோபி வட்டம், சிறுவலூா் அருகே கூளைமூப்பனூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் பூஜை செய்ய பூசாரி வெள்ளிக்கிழமை காலை வந்துள்ளாா். அப்போது கோயிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதும் அருகிலேயே ஒருவா் குடிபோதையில் மயங்கிக் கிடப்பதையும் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
தகவல் அறிந்த கிராம மக்கள் போதையில் படுத்து இருந்த நபரைப் பிடித்து சிறுவலூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா், ஓடத்துறை அருகே நஞ்சகவுண்டன்பாளையம் மாரியப்பன் கோயில் வீதியைச் சோ்ந்த கவின் (25)என்பதும், கலிங்கியத்தில் உள்ள பேக்கரியின் பூட்டை உடைத்து திருடியதும், பிறகு மது அருந்திவிட்டு கூளைமூப்பனூரில் கோயில் உண்டியலை உடைத்து சுமாா் 1,000 ரூபாய் பணத்தை திருடிய பின்னா் போதையில் அங்கேயே படுத்து இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் கவினை கைது செய்தனா். கவின் மீது திண்டுக்கல், கோவை, திருப்பூா், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 8 திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.
