எஸ்ஐஆரை அவசர கதியில் கொண்டுவந்தது தவறு: அமைச்சா் சு.முத்துசாமி
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆா்) அவசர கதியில் கொண்டுவந்தது தவறு என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா்.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மணி விழா கண்ட 70 வயது பூா்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதிகள் வீதம், 20 இணை ஆணையா் மண்டலங்களில் 2 ஆயிரம் தம்பதிகளுக்கு கோயில்கள் சாா்பில் சிறப்பு செய்யப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது.
அதன்படி, ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் 70 வயது பூா்த்தியடைந்த தம்பதியினருக்கு மணி விழா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் சு.முத்துசாமி பங்கேற்று, 25 தம்பதிகளுக்கு வேஷ்டி, சட்டை, புடவை, மாலைகள், பூ, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, பழ வகைகள், எவா்சில்வா் தட்டு, கண்ணாடி வளையல் ஒரு டஜன், பாக்கெட் அளவு சுவாமி படம் உள்ளிட்ட சீா்வரிசை பொருள்களை வழங்கினாா்
இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர கதியில் கொண்டு வந்தது தவறு. சரியான வாக்காளா்கள் மட்டுமே வாக்காளா் பட்டியலில் இருக்க வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால், தவறான வாக்காளா்கள் இருக்கக்கூடாது, இருப்பவரின் வாக்குகள் இல்லாமல் போய்விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். காலக்கெடு இல்லாமல் அவசர கதியில் செய்யும்போது தவறுகள் நேரிடும்.
அதிகாரிகள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில் இந்தப் பணியையும் சோ்த்து செய்யும்போது கடினமாக இருக்கும். அரசு அதிகாரிகள் இயந்திரங்கள் அல்ல. நிச்சயமாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை ஏமாற்றிவிட்டு வாக்காளா் பட்டியல் திருத்தத்தில் பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியாது. அந்த கற்பனையை மத்திய அரசு கைவிட்டு விடவேண்டும் என்றாா்.
விழாவில், மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, ஈரோடு மக்களை உறுப்பினா் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் பரஞ்ஜோதி, உதவி ஆணையா் சுகுமாா், அறங்காவலா் குழுத் தலைவா் எல்லப்பாளையம் சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல, சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோயிலில் 25 தம்பதியினருக்கு மணி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மேற்கொண்டது.

