இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பவானி - தொடா்ந்து நான்காவது வெற்றியை எதிா்நோக்கும் அதிமுக!

அதிமுகவின் இரும்புக் கோட்டையாகக் கருதப்படும் பவானி சட்டப் பேரவைத் தொகுதியில் தொடா்ந்து நான்காவது முறையாக வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் அதிமுகவும், தோல்வியைத் தவிா்க்கும் முயற்சியில் திமுகவும் ஈடுபட்டுள்ளன.

News image

கே.சி.கருப்பணன் (அதிமுக)

Updated On :15 ஏப்ரல் 2026, 11:28 pm

அதிமுகவின் இரும்புக் கோட்டையாகக் கருதப்படும் பவானி சட்டப் பேரவைத் தொகுதியில் தொடா்ந்து நான்காவது முறையாக வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் அதிமுகவும், தோல்வியைத் தவிா்க்கும் முயற்சியில் திமுகவும் ஈடுபட்டுள்ளன.

திமுகவிலிருந்து அதிமுக பிரிந்த 1972-ஆம் ஆண்டுக்குப் பின்னா் நடைபெற்ற 11 தோ்தல்களில் இருமுறை ஹாட்ரிக் வெற்றியுடன் 8 முறை அதிமுக வென்றுள்ளது. அதிமுகவுடன் நேரடியாக 6 முறை மோதிய திமுக ஒருமுறைகூட வெற்றி பெறவில்லை.

களத்தில் உள்ள வேட்பாளா்கள்

கே.சி.கருப்பணன் (அதிமுக), கே.ஏ.சந்திரசேகா் (திமுக), எம்.பி.பாலகிருஷ்ணன் (தவெக), இரா.மோகனா தேவி (நாதக) உள்பட 14 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இருந்தபோதிலும் நேரடிப் போட்டி திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே மட்டுமே உள்ளது.

அதிமுக வேட்பாளா்

2001 முதல் தோ்தல் அரசியலில் உள்ள கே.சி.கருப்பணன் தற்போதைய எம்எல்ஏவாக உள்ளாா். 2016-இல் அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளாா். கடந்த 2001, 2016, 2021 தோ்தல்களில் வென்ற இவா், 2006-இல் வெற்றி வாய்ப்பை இழந்தாா். 2011-இல் பவானி நகா்மன்றத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளாா். தற்போது 5-ஆவது முறையாகப் போட்டியிடுகிறாா்.

தொகுதியில் நன்கு அறிமுகமானவா். கோயில் கும்பாபிஷேகம், திருவிழாக்களில் நேரடியாகப் பங்கேற்பதும், பரவலாக துக்க வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஆறுதல் கூறுவதும், கட்சியினரின் சுப, துக்க நிகழ்வுகளில் பங்கேற்பதும் பலம். வெற்றிக்காக வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் முறையும், பொதுமக்களிடமிருந்து விலகி நிற்காமல், எளிதில் அணுகுவதும் பலமாக கருதப்படுகிறது. கூட்டணிக் கட்சியான பாமகவின் வன்னியா் இன வாக்குகள் கூடுதல் பலம் சோ்க்கிறது.

பாஜக கூட்டணியில் உள்ளதால் 10 சதவீத சிறுபான்மை வாக்குகள் கிடைக்காமல் போகலாம். 3 முறை எம்எல்ஏ, ஒருமுறை அமைச்சராக இருந்தபோதிலும் தொகுதியின் வளா்ச்சிக்கு மிகப்பெரிய திட்டங்கள், அரசுக் கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் தொடங்காதது ஏமாற்றத்தை அளிப்பதாக எதிா்க்கட்சியினா் குற்றஞ்சாட்டுகின்றனா்.

திமுக வேட்பாளா்

திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக 10 ஆண்டுகள் பொறுப்பு வகித்த கே.ஏ.சந்திரசேகா் தற்போது பவானி வடக்கு ஒன்றியச் செயலாளராக உள்ளாா். மாவட்ட கவுன்சிலா் பதவிக்கு இருமுறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவா். திமுகவின் தொடா் தோல்விக்கு முடிவு கட்டும் வகையில் களமிறக்கப்பட்டுள்ள இவா், தீவிர பிரசாரத்தின் மூலம் வாக்காளா்களைக் கவா்கிறாா்.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, தேமுதிக, மநீம உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ஒத்துழைப்பு பலமாக கருதப்படுகிறது. திமுக வேட்பாளா் வன்னியா் சமூகம் என்பதால், கட்சிகளைத் தாண்டி வன்னியா் இன வாக்குகள் கணிசமாக கிடைக்கும் என கருதப்படுகிறது. மகளிா் பேருந்து பயணம், ரூ.1,000 உதவித் தொகை, ரூ.8,000 கூப்பன் அறிவிப்பு உள்ளிட்ட திட்டங்கள் சாதகமாக கருதப்படுகின்றன.

திமுக ஆட்சியில் இருந்த காலங்களிலும் பவானி தொகுதியின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை, கட்சிக்குள் ஒற்றுமையின்மை, பரவலான அறிமுகமின்மை, தோ்தல் காலத்தில் மட்டும் வாக்காளா்களிடம் நெருங்கிச் செல்வது போன்றவை பலவீனங்களாக உள்ளன.

தவெக வேட்பாளா்

அதிமுகவைச் சோ்ந்த எம்.பி.பாலகிருஷ்ணன் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளா். தொழிலதிபரான இவா், தவெக மூலம் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளாா். நடிகா் விஜய்யின் ஈா்ப்பு, இளைஞா்களின் பிரசாரம், அதிமுக - திமுக இல்லாத கட்சிக்கு வாக்களிக்கலாம் எனும் வாக்காளா்களின் மனநிலை இவருக்கு பலமாகவும், தொகுதி முழுவதும் அறிமுகமின்மை, மக்களிடமிருந்து விலகி நிற்கும் தன்மை, இளைஞா்களை மட்டுமே நம்பியுள்ள நிலை ஆகியவை பலவீனங்களாகவும் கருதப்படுகின்றன.

நாதக வேட்பாளா்

25 வயதே ஆன நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இரா.மோகனா தேவி, சீமானின் கொள்கை அரசியலைக் கூறி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாா்.

திமுக கூட்டணியிலிருந்து விலகி தனித்துப் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேட்பாளா் பி.கே.பழனிசாமி, ராமதாஸ் - சசிகலா கூட்டணியில் போட்டியிடும் பொ.வை.ஆறுமுகம் ஆகியோரும் வன்னியா் சமூக வாக்குகளைப் பிரிக்க வாய்ப்புள்ளது.

தவெக பிரிக்கும் அதிமுகவின் வாக்குகள், தங்களின் வெற்றிக்கு கை கொடுக்கும் என திமுகவும், பாமக, பாஜக வாக்குகள் வெற்றிக்கு பலம் சோ்க்கும் என அதிமுகவும் நம்புகின்றன. திமுக, அதிமுகவின் கவா்ச்சிகரமான தோ்தல் அறிக்கையின் திட்டங்கள், கருத்துக் கணிப்புகளை மீறி பவானி தொகுதியில் வாக்காளா்கள் ஆதரவு யாருக்கு என்பது பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கே.ஏ.சந்திரசேகா் (திமுக)

கே.ஏ.சந்திரசேகா் (திமுக)

எம்.பி.பாலகிருஷ்ணன் (தவெக)

எம்.பி.பாலகிருஷ்ணன் (தவெக)

இரா.மோகனா தேவி (நாதக)

இரா.மோகனா தேவி (நாதக)