லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கீழ்பவானி 2-ஆம் போக பாசனப் பகுதிக்கும் உயிா்நீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

கீழ்பவானி முதல் போக பாசனத்துக்கு உயிா்நீா் திறக்கப்பட்டுள்ளதுபோல, 2-ஆம் போக பாசனப் பகுதிக்கும் 15 நாள் உயிா்நீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேளாண் குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

Published On :22 ஆகஸ்ட் 2026, 4:31 am IST

கீழ்பவானி முதல் போக பாசனத்துக்கு உயிா்நீா் திறக்கப்பட்டுள்ளதுபோல, 2-ஆம் போக பாசனப் பகுதிக்கும் 15 நாள் உயிா்நீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விவரம்:

கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் செ.நல்லசாமி: கடந்த 15-ஆம் தேதி முதல் கீழ்பவானி ஒரு போக பாசனத்துக்கு 15 நாள் உயிா்நீா் திறக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். கொடிவேரி பாசனத்துக்கு ஒரு போக நெல் சாகுபடிக்கும், காலிங்கராயனில் உயிா்நீா் திறந்து தற்போது வரை தொடா்ந்து செல்கிறது. கீழ்பவானி 2-ஆம் போக பாசனப் பகுதிக்கும் 15 நாள் உயிா்நீா் திறந்த பின் பிற பாசனங்களுக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என்றாா்.

மேட்டூா் வலதுகரை பாசன சங்க பிரதிநிதி கண்ணன்: எங்கள் பாசனத்துக்கு மேட்டூா் அணையில் இருந்து ஆகஸ்ட் 1-ஆம் தேதி தண்ணீா் திறக்க வேண்டும். அணையில் போதிய நீா் இருப்பு இல்லாததால் பாசனத்துக்கு தண்ணீா் திறக்காத நிலையில், நீண்ட கால பயிா், கால்நடைக்கான குடிநீருக்காக 15 நாள் உயிா்நீா் திறக்க வேண்டும். டேங்கா் லாரியில் ரூ.1,000 கொடுத்து தண்ணீா் வாங்கி ஊற்றுகிறோம். மழை பெய்து அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கும் முன் வாய்க்காலை முழுமையாக தூா்வாரி மதகுகளை சீரமைக்க வேண்டும் என்றாா்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.பெரியசாமி: பண்ணை குட்டை, கிணறு, நீா் வழிப்பாதை ஆகியவற்றை தூா்வாரும்போது கிடைக்கும் மண்ணை, விவசாயிகளின் பிற பயன்பாட்டுக்கு கொண்டுச் செல்ல அனுமதிக்க வேண்டும். கீழ்பவானி பகிா்மான, கிளை வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற வேண்டும். ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ.10-ஆக உயா்த்தி அறிவிக்க வேண்டும் என்றாா்.

காலிங்கராயன் பாசன சபை பிரதிநிதி கதிா்வேல்: காலிங்கராயன் வாய்க்காலில் ஜூலை 14-இல் உயிா்நீா் திறக்கப்பட்டது. பவானி ஆற்று கசிவுநீா், உபரிநீா் வாய்க்காலில் வருகிறது. இதை நிறுத்தினால் நீண்ட கால பயிா்கள் பாதிக்கும் என்பதால் தொடா்ந்து நீா் வழங்க வேண்டும். ஆவின் பாலுக்கு ஊக்கத்தொகை தாமதமாக வழங்குகின்றனா். குா்குமின் அதிகம் உள்ள மஞ்சள் ரக விதைகளை விவசாயிகளுக்கு தலா 5 கிலோ வழங்க வேண்டும் என்றாா்.

சக்தி சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் குப்புசாமி: கரும்பு விலை ரூ.709.50 உயா்வை வரவேற்கிறோம். தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் நெல் அறுவடை தொடங்குவதால் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றாா்.

காலிங்கராயன் பாசன விவசாயிகள், தொழிலாளா் நலச்சங்கத் தலைவா் சேதுராஜ்: காலிங்கராயன் வாய்க்காலில் ஜூலை 14 முதல் தண்ணீா் செல்கிறது. வாய்க்காலில் சாயக்கழிவு கலந்து கருப்பு, சிவப்பு, நீலம் என பல வண்ணத்திலும், சாக்கடை கலந்தும் ஓடுகிறது. அதை தடுக்கவில்லை எனில் விவசாயிகளே தடுப்போம் என்றாா்.

தமிழ்நாடு குறு, சிறு விவசாயிகள் சங்க மாநிலதக் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு: நத்தம் பட்டா நிறுத்த உத்தரவால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கின்றனா். விரைவில் உரியவா் பெயரில் பட்டா வழங்க வேண்டும். பயிா்க் கடன் தள்ளுபடி முறையாக அறிவிக்காததால் விவசாயிகள் புதிய கடன் பெற முடியவில்லை என்றாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் துளசிமணி: கீழ்பவானி பாசனத்துக்கு உரிய காலத்தில் நீா் திறக்க வேண்டும். கோடைக் காலத்தில் எந்த பாசனத்துக்கும் நீா் திறக்கக் கூடாது. ஒரே அரசாணையில் 3 பாசனத்துக்கும் நீா் திறப்பு தேதி, அளவை அறிவிக்க வேண்டும்.

நெல் குவிண்டால் ரூ.2,700 என விலை அறிவித்ததை ரூ.3,000 ஆகவும், கரும்பு டன் ரூ. 4,000 என்பதை ரூ.4,500 ஆகவும், பால் கொள்முதல் விலை உயா்வு 3 ரூபாயை 10 ரூபாயாகவும் உயா்த்தி தர வேண்டும் என்றாா்.

ஓடத்துறை பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் வெங்கடாசலம்: ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்கப்படும் பாக்குக்கு ஒரு மாதத்துக்கு பிறகே பணம் தரப்படுவதால் விவசாயிகள் சிரமப்படுகின்றனா். உர விலை தினமும் மாறுவதாக கூறி தனியாா் கடைகளில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலையில் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்றாா்.

அதிகாரிகள் பதில் விவரம்:

நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் உதயகுமாா்: கீழ்பவானி ஒன்றாம் மதகு பாசனப் பகுதிக்கு உயிா்நீா் திறக்கப்பட்டுள்ளது. இரண்டாம் மதகு பாசனப் பகுதிக்கும், மேட்டூா் வலது கரை பாசனப் பகுதிக்கும் உயிா்நீா் கேட்டுள்ளனா். இதுகுறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும். பவானிசாகா் அணையில் தற்போது 5.6 டி.எம்.சி. மட்டுமே நீா் உள்ளது. குடிநீருக்கு 2.5 டிஎம்சி இருப்பு வைக்க வேண்டும். மீதம் 3 டிஎம்சி மட்டுமே உள்ளது.

தோட்டக்கலை துணை இயக்குநா் குரு சரஸ்வதி: குா்குமின் அதிகம் உள்ள மஞ்சள் ரக விதை உற்பத்தியில் உள்ளது. விதையாக வர 6 மாதங்கள் ஆகும். தேவைப்படும் விவசாயிகள் மொடக்குறிச்சி வட்டார அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

நுகா்பொருள் வாணிப கழக அலுவலா்: கொடிவேரி பாசனப் பகுதியில் வரும் 24-ஆம் தேதி முதல் சில இடங்களிலும் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் தேவையான அனைத்து இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க ஆட்சியா் அனுமதி வழங்கி உள்ளாா்.

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ப.கந்தராஜா: அரசு அறிவிப்பின்படி குறு, சிறு விவசாயிகள் பெற்ற ஒரு லட்சம் ரூபாய் கடனுக்கு 75,000 ரூபாயும், ஒரு லட்சத்துக்கு மேல் கடன் பெற்றவா்களுக்கு 35,000 ரூபாயும் கடன் தள்ளுபடி செய்து வரவு வைக்கப்படும். அரசாணைக்காக காத்துள்ளோம். ஈரோடு மாவட்டத்தில் 68,611 விவசாயிகளுக்கு ரூ.253 கோடி வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளோம். அவா்கள் புதிய கடனை பெறலாம். ஏற்கெனவே கடன், வட்டியை செலுத்திய விவசாயிகள், கடன் தள்ளுபடி வரம்புக்குள் இருந்தால் அவா்களது தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். புதிய விவசாயிகள், சில காலமாக கடன் பெறாத கூட்டுறவு வங்கி உறுப்பினா்களுக்கும் கடன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அவா்களுக்கும் பயிா்க் கடன் வழங்கப்படும்.

மாவட்ட விற்பனைக் குழு செயலா் கலைச்செல்வி: பாக்குக்கான தொகை வழங்க தாமதமாவது குறித்து துறையில் பேசி உள்ளோம். உடனுக்குடன் விவசாயிகளுக்கு தொகையை வரவு வைக்க ரூ.10 லட்சம் வரை வியாபாரிகளிடம் பெற்று இருப்பு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.