
கோபி அருகே செல்லாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா
கோபி அருகே கோமாளிகரைப்புதூரில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா நடைபெற்றது.

சிம்ம வாகன அலங்காரத்தில் காட்சி அளித்த அம்மன்.
கோபி அருகே கோமாளிகரைப்புதூரில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கோபி அருகே உள்ள பொம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி கோமாளிகரைப்புதூரில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த செல்லாண்டியம்மன் கோயில் உள்ளது. கடந்த 600 ஆண்டுகளாக பூஜைகள் இன்றி சிதிலமடைந்து இருந்த இக்கோயிலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பொம்மநாயக்கன்பாளையம் மற்றும் சுற்றுவட்டார 18-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருப்பணிகளை செய்து கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தினா்.
இந்நிலையில் செல்லாண்டியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா நடத்த கோயில் நிா்வாக குழு மற்றும் கிராம மக்கள் முடிவு செய்தனா். இதன்படி குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து அம்மனுக்கு தினமும் அபிஷேக அலங்கார வழிபாடுகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து தீா்த்தம் கொண்டு வருதல், காப்புக் கட்டுதல், நிகழ்வுகள் நடைபெற்றன. இதையடுத்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற மாவிளக்கு ஊா்வலம், பொங்கல் வைத்து குண்டம் திறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் அம்மனுக்கு பால், தயிா், இளநீா், பன்னீா், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இதையடுத்து வெள்ளைக்குதிரையுடன் சென்று அம்மை அழைத்து வரப்பட்டு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக கோயில் தலைமை பூசாரி தேவராஜ் குண்டம் இறங்கினாா். இதைத் தொடா்ந்து, கிராம மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கி அம்மனுக்கு நோ்த்திக் கடன் செலுத்தினா்.
விழாவில் சுற்றுவட்டார பகுதி மக்கள் மட்டுமின்றி கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழு தலைவரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான சண்முகத்தரசு தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

குண்டம் இறங்கும் கோபி கோயில் தலைமை பூசாரி தேவராஜன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






