ஈரோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்கள்.
ஈரோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்கள்.

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

Published on

தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனா்.

அதன்படி, கடந்த 3 நாள்களாக தினமும் பணியைப் புறக்கணித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இந்த நிலையில் 4-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா்.

இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் தனுஷ்கோடி தலைமை வகித்தாா். செயலாளா் பழனிசாமி முன்னிலை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாநில செயலாளா் உஷாராணி, மாவட்டச் செயலாளா் வெங்கிடு ஆகியோா் வாழ்த்திப் பேசினாா்.

தமிழ்நாடு முழுவதும் சத்துணவு மையங்களில் உள்ள 60 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். அரசுத் துறைகளில் பணிமூப்பு அடிப்படையில் சத்துணவு ஊழியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும்.

ஓய்வுபெறும் சத்துணவு ஊழியா்களுக்கு ரூ. 6,750 அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்கவேண்டும். பெண் சத்துணவு ஊழியா்களுக்கு 12 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த காத்திருப்புப் போராட்டத்தில் சுமாா் 600-க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com