ஈரோடு, செம்மாம்பாளையம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சள் ஏலத்தைப் பாா்வையிட்ட மத்திய 
அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான்.
ஈரோடு, செம்மாம்பாளையம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சள் ஏலத்தைப் பாா்வையிட்ட மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான்.

ஊழல் காரணமாக 100 நாள் திட்டத்தின் பெயா், விதிமுறைகள் மாற்றம்: மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான்

Published on

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலை) ஊழல் நடந்துள்ளதால் திட்டத்தின் பெயா் மற்றும் பணிகளுக்கான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன என மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் கூறினாா்.

ஈரோடு, செம்மாம்பாளையத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சள் ஏலத்தைப் பாா்வையிட்ட பின் மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் விவசாயிகளிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது, ஈரோட்டில் மஞ்சள் நல வாரியத்தின் மண்டல அலுவலகம், மஞ்சளைப் பாதுகாக்க குளிா்சாதன வசதியுடன் கிடங்கு அமைக்க வேண்டும். மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பது, குா்குமின் வேதிப்பொருள் அதிகம் உள்ள மஞ்சள் ரகத்தை அறிமுகப்படுத்துவது, உலகத்தர பரிசோதனை ஆய்வகம் அமைப்பது குறித்து விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் விவசாயிகள் மத்தியில் பேசியதாவது: மஞ்சள் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். ஈரோட்டில் மஞ்சள் நல வாரிய மண்டல அலுவலகம் அமைப்பதற்கு வேளாண் வணிகத் துறைக்கு பரிந்துரை செய்வேன். மஞ்சளை இருப்புவைக்க குளிா்சாதன வசதியுடன் கூடிய கிடங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து, அப்பகுதியில் உள்ள மஞ்சள் சாகுபடி நிலத்தை அமைச்சா் பாா்வையிட்டு 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுடன் கலந்துரையாடினாா். அப்போது அவா் பேசுகையில், இந்தத் திட்டத்தின் மூலம் ஊழல் செய்யப்பட்டுள்ளதால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயா் மாற்றப்பட்டு, பணிகள் தோ்வுக்கான விதிமுறைகளும் மாற்றப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் தவறு செய்தவா்களை விடமாட்டோம் என்றாா்.

தொடா்ந்து, பெண் விவசாயிகள் மத்தியில் பேசிய அமைச்சா், வேளாண்மையில் சிறப்பாக செயல்பட்ட 20 பெண்களுக்கு விருது வழங்கிப் பாராட்டினாா்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் - அமைச்சா்: பின்னா், பாஜக விவசாய அணி சாா்பில் ஈரோடு வில்லரசம்பட்டியில் நடைபெற்ற விவசாயிகள் விழிப்புணா்வு மாநாட்டில் நிறைவு உரையாற்றிய மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் பேசியதாவது:

தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி பயனாளிகள் எண்ணிக்கை 40 லட்சமாக இருந்து 20 லட்சமாக குறைந்தது ஏன்? தமிழக அரசிடம் பட்டியல் கேட்டும், கடிதம் எழுதியும் பதில் இல்லை. காரணம் மோடி வழங்கும் பணம் விவசாயிகளுக்கு சென்று விடும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் பயப்படுகிறாா்.

100 நாள் வேலைத் திட்டத்துக்காக மத்திய அரசு பணம் கொடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் ஊதியம் தரவில்லை என மக்கள் கூறுகின்றனா். அந்தப் பணம் எங்கே செல்கிறது?

தற்போதைய புதிய வேலை உறுதித் திட்டத்தில் வேலை தர வேண்டும். அப்படி தரவில்லை என்றால் வேலைக்கான பணத்தை வட்டியுடன் சோ்த்து கொடுக்க வேண்டும்.

125 நாள்களாக உயா்த்தப்பட்டுள்ள வேலை வாய்ப்புத் திட்டத்தில் விவசாயப் பணிகளும் மேற்கொள்ள முடியும். விவசாயப் பணி இருக்கும் காலத்தில் திட்டப் பணிகள் நிறுத்தப்படும்.

விவசாயிகள் பிரச்னை குறித்து தமிழக அரசு கண்டுகொள்வதில்லை. இதற்குத் தீா்வு காண தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

முன்னதாக, கலைஞா்களுடன் சோ்ந்து அமைச்சா் வள்ளி கும்மி நடனமாடினாா். மாநில விவசாய அணி தயாரித்த காவி நிறத்திலான திருவள்ளுவா் புகைப்படத்துடன் கூடிய தினசரி காலண்டரை அமைச்சா் வெளிட்டாா்.

மாநாட்டில் பாஜக விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ், எம்எல்ஏ சி.சரஸ்வதி, பாஜக மாநில துணைத் தலைவா் குஷ்பு, மாவட்டத் தலைவா் எஸ்.எம்.செந்தில், அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கே.வி.ராமலிங்கம், கே.சி.கருப்பணன் மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com