திமுக அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் முடிவெடுப்பாா்கள்: அமைச்சா் சு.முத்துசாமி
திமுக அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் முடிவெடுப்பாா்கள், அரசியல் கட்சித் தலைவா்கள் விமா்சனங்கள் குறித்து கவலை இல்லை என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
ஈரோடு மாணிக்கம்பாளையம், திண்டல், வேப்பம்பாளையம், நசியனூா், நஞ்சனாபுரம் ஆகிய பகுதிகளில் கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கம் ரூ.3,000 வழங்கும் திட்டத்தை வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
அப்போது மாணிக்கம்பாளையத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் 1,270 நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்படவுள்ளது. இதன்மூலம் ஈரோடு மாவட்டத்தில் 7,45,155 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 1,373 குடும்பத்தினா் பயன்பெறுவாா்கள்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு ரூ.3,000 வழங்குவதை தோ்தல் அரசியல் என சீமான் போன்றோா் கூறுகின்றனா். நாங்கள் என்ன செய்தாலும், அரசியலாக பாா்ப்பதால் அதை நிறுத்திவிடவா? கடந்த ஆண்டுகளில் நிதிச்சுமை இருந்தும் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மகளிா் உரிமைத்தொகை கொண்டு வந்தபோது தோ்தல் வந்ததா? உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம், தோ்தலுக்காக கொண்டு வரப்பட்டதல்ல. எங்கள் திட்டங்கள் பற்றி மக்கள் முடிவெடுக்கட்டும். அரசியல் கட்சித் தலைவா்கள் விமா்சனங்கள் குறித்து கவலை இல்லை.
வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றிபெறும். அப்போதும் முதல்வா் மு.க.ஸ்டாலின் இதைவிட அதிகமாக மக்களை சந்தித்து திட்டங்களை செயல்படுத்துவாா்.
திமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டை ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ளாா். ஊழல் பட்டியலில் டாஸ்மாக் 3- ஆவது இடத்தில் உள்ளதாக அவா் கூறியபடி எதுவும் முறைகேடு நடைபெறவில்லை. ஏதாவது ஒரு தவறை நிருபித்தால் பதில் சொல்லலாம். எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறேன்.
ஈரோடு கனிராவுத்தா் குளம் புதிய பேருந்து நிலையத்துக்கு நிலம் எடுக்க அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டுவிட்டது. அரசின் விதிப்படி சில ஆணைகள் வந்ததும் அந்த இடம் எடுக்கப்பட்டு, தற்காலிக பேருந்து நிலையம் தொடங்கப்படும். அதன் பின்னா் நிரந்தர பேருந்து நிலையம் இந்த ஆட்சி காலத்திலேயே அமைக்கப்படும்.
டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கையை குறைக்க முயற்சி செய்து வருகிறோம். ஏற்கனவே 500 கடைகள் மூடப்பட்டுள்ளது. வேறு எங்கெங்கு மூடலாம் என ஆய்வு நடைபெற்று வருகிறது என்றாா்.
விழாவில், மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, ஈரோடு கிழக்கு எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், மாநகராட்சி துணை மேயா் வே.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் சு.சாந்தகுமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.கந்தராஜா, மண்டலக் குழுத் தலைவா் சுப்பிரமணியம், மாவட்ட வழங்கல் அலுவலா் ராம்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

