தாளவாடி திகினாரை யில் அகழி வழியாக வெளியேறும் யானைகள்.
ஈரோடு
தாளவாடி அருகே கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள்
தாளவாடி அருகே கூட்டம் கூட்டமாக கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகளை விவசாயிகள் பொக்லைன் மூலம் காட்டுக்குள் விரட்டினா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை போன்ற வன விலங்குகள் உள்ளன. வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி அடிக்கடி விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவது தொடா் கதையாகி வருகிறது.
இந்த நிலையில் ஜீரகள்ளி வனச் சரகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் இருந்து வெளியேறிய யானை கூட்டம் திகனாரை கிராமத்தில் உள்ள மானாவாரி நிலத்தில் சுற்றித்திரிந்தன. இதனால் அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் அச்சமடைந்தனா்.
இதையடுத்து விவசாயிகள் ஒன்றிணைந்து பொக்லைன் இயந்திரம் மூலம் யானைகளை காட்டுக்குள் விரட்டினா். பொக்லைன் இரைச்சலால் பயந்துபோன யானைகள் அகழி வழியாக சென்றன.

