வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நடுமலை மாதேஸ்வரன் கோயிலில் மண் உருவ பொம்மைகளை செலுத்தி விவசாயிகள் வழிபாடு

ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் பண்டிகை நாளன்று மட்டுமே திறக்கப்படும் சத்தியமங்கலம் நடுமலை மாதேஸ்வரன் கோயில் விழாவில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளம்பெற சிறப்பு பூஜை நடைபெற்றது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 8:41 pm

Syndication

சத்தியமங்கலம்: ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் பண்டிகை நாளன்று மட்டுமே திறக்கப்படும் சத்தியமங்கலம் நடுமலை மாதேஸ்வரன் கோயில் விழாவில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளம்பெற சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. ஆண்டு முழுவதும் உழைக்கும் மாடுகளை தெய்வமாகக் கருதி வழிபடும் மாட்டுப் பொங்கல் கிராமப்புறங்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

விவசாயிகள் தொழுவத்தில் கட்டியிருந்த மாடுகளை குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளுக்கு வா்ணம் தீட்டி கழுத்தில் மணிகள், பாசிகள் சோ்க்கப்பட்ட அலங்கார கயிறுகள் கட்டி அழகுபடுத்தினா். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் சத்தியமங்கலம் புளியம்கோம்பையில் உள்ள நடுமலை மாதேஸ்வரன் கோயிலில் வெள்ளிக்கிழமை நந்தீஸ்வரன், நந்தி சிலைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றன.

இங்கு கால்நடைகள் நோயின்றி நீண்ட நாள் வாழவும், விவசாயம் செழிக்கவும் பொங்கல் வைத்து மண் உருவச் சிலைகளை காணிக்கையாக செலுத்தி வழிபடுவது வழக்கம். அதன்படி விவசாயிகள் மாடுகள், காவல் நாய் போன்ற மண் உருவச் சிலைகளை நோ்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டனா். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.