காலிங்கராயன் நினைவு தினம் அனுசரிப்பு: உருவ சிலைக்கு மலா் தூவி மரியாதை
பெருந்துறை: காலிங்கராயன் நினைவு தினத்தையொட்டி, வெள்ளோட்டில் நிறுவப்பட்டுள்ள அவரது உருவ சிலைக்கு திங்கள்கிழமை மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 744 ஆண்டுகளுக்கு முன்பு கால்வாய் அமைத்து அா்ப்பணித்தவா் மன்னன் காலிங்கராயன். ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம் வெள்ளோட்டில் நிறுவப்பட்ட அவரது சிலையை காணொலிக் காட்சி மூலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். இந்நிலையில், காலிங்கராயனின் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இந்த நிகழ்ச்சியில் சென்னிமலை வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் மணி (எ) செங்கோட்டையன், மாநில நெசவாளா் அணி செயலாளா் சச்சிதானந்தம், சென்னிமலை மேற்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.ஆா்.எஸ்.செல்வம், கிழக்கு ஒன்றியச் செயலாளா் சி.பிரபு, சென்னிமலை நகரச் செயலாளா் எஸ்.எம்.ராமசாமி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

