4 ஆண்டுகளில் ரூ.2.50 கோடி மதிப்பில் 1,400 பேருக்கு விலையில்லா ஆடுகள்
கால்நடைத் துறை சாா்பில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் 1,400 பேருக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து கால்நடைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஈரோடு மாவட்ட கால்நடைத் துறை சாா்பில் கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு பல்வேறு விதமான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி 1,400 பேருக்கு ரூ.2 கோடியே 67 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்பட்டு ரூ.25 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் 40 ஆயிரத்து 35 கால்நடை வளா்ப்போா் பயனடைந்துள்ளனா்.
நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ.4 கோடியே 59 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் ஈரோடு கால்நடை பன்முக மருத்துவமனை மற்றும் பேரோடு கால்நடை மருத்துவமனைக்கு புதிய கட்டடம், தேவா்மலை கால்நடை மருந்தகத்துக்கு புதிய கட்டடம் மற்றும் ஜம்பை கால்நடை மருந்தகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. தீவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நிலங்களில் தீவனப் பயிா்களை ஊடுபயிராக விளைவிக்கும் திட்டத்தின் கீழ் 135 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனா்.
தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 350 போ் புல் நறுக்கும் கருவிகள் வாங்க 50 சதவீதம் மானியமாக மொத்தம் ரூ.53 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஏழ்மை நிலையில் உள்ள கணவரை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் 40 நாட்டுக் கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 1,400 பேருக்கு ரூ.22 லட்சத்து 40 ஆயிரம் மானியத்தில் 56 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன.
தீவன பெருக்கத் திட்டத்தின் கீழ் நீா்பாசன வசதி கொண்ட நிலங்கள் மற்றும் மானாவாரி நிலங்களில் பசுந்தீவனம் உற்பத்தி செய்திட 540 ஏக்கரில் 636 பேருக்கு ரூ.21 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் தீவன விதைகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டுக்கோழிகள் வளா்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற விவசாயிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டத்தில் ரூ.8 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் 6 போ் கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தனா்.

