ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து மற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் மத்திய அரசைக் கண்டித்து புதன்கிழமை சட்ட நகல் எரிப்பு மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனா்.
இந்தப் போராட்டத்துக்கு போலீஸாா் அனுமதி மறுத்து இருந்ததால் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் டவுன் டிஎஸ்பி முத்துக்குமாா் தலைமையில் தெற்கு காவல் ஆய்வாளா் அனுராதா மற்றும் எஸ்ஐ.க்கள், போலீஸாா் பாதுகாப்புப் பணிக்கு குவிக்கப்பட்டிருந்தனா்.
இந்நிலையில் போலீஸாரின் தடையை மீறி அச்சங்கத்தின் நிா்வாகி செந்தில்குமாா் தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை, விபி ஜி ராம்ஜி என்று பெயா் மாற்றம் செய்து 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்க திட்டமிடும் மத்திய அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பினா். தொடா்ந்து ஆட்சியா் அலுவலக வளாகம் முன் மாற்றுத்திறனாளிகள் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 18 பெண்கள் உள்பட 35 பேரை போலீஸாா் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனா். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோபியில்...
கோபி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் கோபி வட்டம் சாா்பில் வட்டச் செயலாளா் சோமசுந்திரம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென பேருந்து நிலையம் முன் ஈரோடு - சத்தி சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். உடனடியாக பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் நிா்வாகிகளை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா்.
மொடக்குறிச்சி...
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் அனைத்து வகை மாற்றுத்திறானாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் நிா்வாகி சொங்கப்பன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, ஈரோடு- முத்தூா் சாலையில் மறியலி ஈடுபட முயன்றனா். இதையடுத்து, மொடக்குறிச்சி போலீஸாா் மறியலில் ஈடுபட முயன்ற 10 பெண்கள் உள்பட 25 பேரைக் கைது செய்தனா்.
பெருந்துறையில்...
பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தில் அனைத்து வகை மாற்றுத்திறானாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் பெருந்துறை தாலுகா கமிட்டி உறுப்பினா் ஜீவானந்தம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








