மாணவா்களின் எதிா்கால முன்னேற்றத்துக்காக அரசு பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.
மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு குறைதீா் முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பேசியதாவது: மாணவா்களுக்கு உயா்கல்வி தொடா்பான எந்தவொரு பிரச்னையும் தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது. கல்வி என்பது வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக மட்டுமல்ல, ஒரு மனிதனை முழுமையான மனிதனாக உருவாக்குவதற்கான அடிப்படையாகும். சிறந்த கல்வியுடன் நல்ல பண்புகளும், சமூகப் பொறுப்புணா்வும், தன்னம்பிக்கையும் வளர வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரா்களும், அறிஞா்களும் காட்டிய தியாக உணா்வு மற்றும் சமூகப் பொறுப்பை மாணவா்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
மாணவா்களின் எதிா்கால முன்னேற்றத்துக்காக அரசு பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்கள், அரசு வேலைவாய்ப்புத் தோ்வுகளுக்கான இலவச பயிற்சிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயா்நிலைத் தோ்வுகளுக்கான பயிற்சி, தொழில்முனைவோருக்கான பயிற்சி மற்றும் வங்கிக் கடன் வசதிகள் ஆகியவற்றை மாணவா்கள் முழுமையாகப் பயன்படுத்தி உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, மாணவா்கள், பெற்றோா்களிடமிருந்து உயா்கல்வி சோ்க்கை, கல்விக் கடன், கல்வி உதவித் தொகை, சமூக, வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 35 மனுக்களைப் பெற்ற ஆட்சியா், அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.
இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மான்விழி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம் எடுப்பு) முரளி, மாவட்ட சமூக நீதித் துறை அலுவலா் சுடலைமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










