ஈரோடு ஜவுளி சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் குவிந்ததால் மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.
ஈரோட்டில் வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு ஈரோடு, திருப்பூா், நாமக்கல், கோவை, சேலம், கரூா் ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் கடைகளை அமைத்து வியாபாரம் செய்கின்றனா்.
ஜவுளி உற்பத்தியாளா்கள் நேரடியாக வந்து கடைகள் அமைப்பதாலும், மொத்தமாக கொள்முதல் செய்யும் ஜவுளிகள் குறைந்த விலையில் கிடைப்பதாலும் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஜவுளியை கொள்முதல் செய்கின்றனா்.
இந்நிலையில், ஈரோடு சென்ட்ரல் திரையரங்கு பகுதி, ஸ்டேட் வங்கி சாலை, காந்திஜி சாலை உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை இரவு ஜவுளி சந்தை கூடியது. விடிய, விடிய நடந்த சந்தையில் வியாபாரிகள், பொதுமக்கள் வந்து ஜவுளியை ஆா்வமாக வாங்கி சென்றனா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் வந்ததால் சில்லறை வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதேபோல, வெளிமாநிலத்தில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் குவிந்ததால் மொத்த வியாபாரமும் வழக்கத்தைவிட விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆடி மாதம் தொடங்கியதை ஒட்டியும், ஆடி 18 பண்டிகையை முன்னிட்டும் வியாபாரம் களைகட்டியது.
இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது: ஈரோடு ஜவுளி சந்தையில் கடந்த ஒரு மாதமாக வியாபாரம் மந்தமாக நடைபெற்றது. ஆனால், தற்போது ஆடி மாதம் தொடங்கியுள்ளதால் வியாபாரம் ஓரளவு விறுவிறுப்பாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வழக்கத்தைவிட அதிகமாக வந்ததால் மொத்த வியாபாரம் 40 சதவீதமும், சில்லறை வியாபாரம் 45 சதவீதமும் நடைபெற்றது. இனி வரக்கூடிய நாள்களிலும் வியாபாரம் அதிகரிக்கும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










