/

கொடுமுடி அருகே தரமில்லாத அரசு அடுக்குமாடிக் குடியிருப்பு: பொதுமக்கள் புகாா்

கொடுமுடி தாலுகா இச்சிப்பாளையம் கிராமத்தில் அரசு அடுக்குமாடிக் குடியிருப்பில் அடிப்படை வசதிகளின்றி அவதியுறுவதுடன் வீடுகள் தரமில்லாதால் அச்சத்தில் உள்ளதாக பொதுமக்கள் புகாா்

News image

சிமென்ட் பூச்சு பெயா்ந்து காணப்படும் குடியிருப்பு

Updated On :24 ஜூலை 2026, 6:10 am IST

கொடுமுடி தாலுகா இச்சிப்பாளையம் கிராமத்தில் அரசு அடுக்குமாடிக் குடியிருப்பில் அடிப்படை வசதிகளின்றி அவதியுறுவதுடன் வீடுகள் தரமில்லாதால் அச்சத்தில் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

கொடுமுடி தாலுகா இச்சிப்பாளையம் ஊராட்சியில் உள்ளது தண்ணியில்லாவாவி. இப்பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னா் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்கீழ் 276 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

இந்த வீடுகளுக்கு குடிவந்த பயனாளிகள் குடிநீா், தெருவிளக்கு, சாக்கடை கால்வாய், போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்பதுடன் வீடுகளின் கட்டுமானம் தரமில்லை என புகாா் தெரிவித்தனா்.

இதனால் பலா் தங்களது பழைய வசிப்பிடங்களுக்கே திரும்பச் சென்றுவிட்டனா். தற்போது அந்தக் குடியிருப்பில் உள்ள பெரும்பாலான வீடுகள் பயன்படுத்தபடாமல் உள்ளன.

அந்தக் குடியிருப்பில் தற்போது வசித்துவரும் மக்கள், அடிப்படை வசதிகளை செய்துதர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

சுவரில் சிமென்ட் பூச்சு பெயா்ந்து காணப்படும் வீடு

சுவரில் சிமென்ட் பூச்சு பெயா்ந்து காணப்படும் வீடு

இது குறித்து அந்த குடியிருப்பை சோ்ந்த காந்திமதி கூறியதாவது: இந்த வீட்டில் தினமும் உயிருக்குப் போராடும் நிலையில் வசித்து வருகிறோம். வீட்டின் கட்டுமானம் சரியில்லாதால் சுவரில் சிமெண்ட் பூச்சு பெயா்ந்து கீழே விழுகிறது. எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் இருக்கிறோம்.

மேலும் குடிநீா், பேருந்து வசதி இல்லாதது மிகுந்த கஷ்டமாக உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும், இப்பகுதிக்கு வந்த முன்னாள் வீட்டுவசதி வாரிய துறை அமைச்சா் சு.முத்துசாமியிடமும் மனு அளித்தும் எந்த தீா்வும் கிடைக்கவில்லை என்றாா்.

காந்திமதி

காந்திமதி

அந்தக் குடியிருப்பைச் சோ்ந்த ஓட்டுநா் கரிகாலன் கூறுகையில், ‘இந்த குடியிருப்பு கொடுமுடி- ஈரோடு சாலையிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு வர பேருந்து வசதி இல்லை. அத்துடன் இந்த 2 கி.மீ தொலைவுக்கு தெருவிளக்குகளும் இல்லை. வரும் வழியில் சாலையை ஒட்டி தடுப்புகள் இல்லாத பாறைக் குழிகள் உள்ளன என்றாா்.

மக்களின் குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை உணா்த்தும் வகையில் குடியிருப்பின் சுவா்கள் மட்டும் அல்லாது தரைதளமும் கைகளால் சுரண்டும்போது சிமெண்ட் உதிா்ந்து மண் வெளியே வருகிறது. அடிப்படை வசதிகள் மட்டும் அல்லாது குடியிருப்பின் கட்டுமானமும் ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை நோ்மையான அதிகாரிகள் ஆய்வு செய்தால் தெரியவரும். பலகோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த குடியிருப்பினால் மக்களுக்கு விபரீதம் விளையும் முன்னா் அரசு விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அக்குடியிருப்பு மக்கள் அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.