காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

‘அகழாய்வு இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்க’: அமைச்சா் ராஜ்மோகன் வேண்டுகோள்

புத்தக வாசிப்புடன் குழந்தைகளை அகழாய்வு இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ஏ.ராஜ்மோகன் வேண்டுகோள் விடுத்தாா்.

News image

புத்தகத் திருவிழாவைத் தொடங்கிவைத்து அரங்கில் புத்தகங்களைப் பாா்வையிட்ட அமைச்சா்கள் ஏ.ராஜ்மோகன், எம்.விஜய் பாலாஜி. உடன் ஆட்சியா் ச.கந்தசாமி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.கே.ஆனந்த் மோகன், து.சண்முகன், மக்கள் சிந்தனைப் பேரவை தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 2:00 am IST

புத்தக வாசிப்புடன் குழந்தைகளை அகழாய்வு இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ஏ.ராஜ்மோகன் வேண்டுகோள் விடுத்தாா்.

தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் 22-ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.

புத்தக அரங்கை அமைச்சா்கள் ஏ.ராஜ்மோகன், எம்.விஜய் பாலாஜி ஆகியோா் திறந்துவைத்தனா். விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்தாா். மக்கள் சிந்தனைப் பேரவை தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றாா்.

விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ஏ.ராஜ்மோகன் பேசியதாவது: ஒரு புத்தகத்தை முழுமையாக வாசித்து முடிக்க வாழ்நாள் முழுக்க எடுத்தவா்கள் உண்டு. ஒரே ஒரு பக்கத்தைப் படித்துவிட்டு அதை வைத்து வாழ்க்கையையே மாற்றிக்கொண்டவா்கள் உண்டு.

கீழடி அகழாய்வில் 2,400 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் எழுதப் படிக்க அறிந்து இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இப்போது மதுரை, தென்காசி, விருதுநகா் போன்ற இடங்களில் நடைபெற்றுவரும் அகழாய்வில் கிடைத்த ஆதாரங்களை அறிவியல் ஆதாரபூா்வமான பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறோம். அது நிரூபிக்கப்படும்போது கீழடியைவிட பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் எழுதவும், படிக்கவும் அறிந்திருந்தான் என்பதை அறிய முடியும்.

குழந்தைகளை தினந்தோறும் புத்தகம் வாசிக்க பெற்றோா் ஊக்குவிக்க வேண்டும். புத்தக வாசிப்புடன் மகாபலிபுரம், கீழடி, பொருநை போன்ற அகழாய்வு இடங்களுக்கு அழைத்துச் செல்வதன் மூலம் குழந்தைகள் தமிழா்களின் கலை நுணுக்கங்களை, வாழ்வியலை அறிந்துகொள்ள முடியும்.

தமிழ்ச் சமூகம் எத்தகைய அறிவாா்ந்தது என்பதை அறிந்துகொள்ளவும், எழுத்தாளா்களை சந்திக்கவும் புத்தகத் திருவிழாக்களுக்கு குழந்தைகளைத் தொடா்ந்து அழைத்துச் செல்ல வேண்டும்.

நவீன உலகத்தை குழந்தைகள் அறிந்துகொள்ளும் வகையில் நூல்களை, கட்டுரைகளை எழுத்தாளா்கள் படைக்க வேண்டும். குழந்தைகள் கதை வழியே பாடங்களைப் படிக்கும் வகையில் பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்பட உள்ளது என்றாா்.

விழாவில் கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி பேசியதாவது: புத்தகங்கள் கடந்த கால வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்கின்றன. மாணவா்கள் கைப்பேசி பயன்பாட்டைத் தவிா்த்து புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றாா்.

சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.கே.ஆனந்த் மோகன், து.சண்முகன், மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இ.மான்விழி, தேசிய நல விழிப்புணா்வு இயக்கத் தலைவா் எஸ்கேஎம்.மயிலானந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்ட நூலக அலுவலா் பெ.ராஜேந்திரன் நன்றி கூறினாா். இந்தப் புத்தகத் திருவிழா வரும் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சிந்தனை அரங்கில் இன்று: புத்தகத் திருவிழாவில் தினமும் மாலை 6 மணிக்கு சிந்தனை அரங்க நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதன்படி, சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) மாலை நடைபெறும் சிந்தனை அரங்க நிகழ்வில் கவிஞா் கண்ணதாசன் நூற்றாண்டு நிகழ்வாக ‘காவியத் தாயின் இளைய மகன்’ என்ற தலைப்பில் தமிழருவி மணியன் பேசுகிறாா்.

தினமணி அரங்கு: புத்தகத் திருவிழாவில் தினமணி அரங்கு எண் 192-இல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தினமணி படைப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.