தேசத்தின் ஒற்றுமையைப் பாதுகாக்க மாணவா்கள் முன்வர வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
கோவையில் குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின் சாா்பில் ஜிகேஎன்எம் செவிலியா் கல்லூரி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. அறக்கட்டளைத் தலைவா் ஆா்.கோபிநாத் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கல்லூரியைத் திறந்து வைத்துப் பேசியதாவது: மாநிலங்களவையில் இன்று மிகவும் இறுக்கமான சூழல் நிலவியது அனைவருக்கும் தெரியும். தில்லியில் எத்தனை இடா்ப்பாடுகள் இருந்தாலும் அதை ஓரத்தில் வைத்துவிட்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்ற உணா்வுடன் வந்திருக்கிறேன். குப்புசாமி நாயுடு அன்று விதைத்த விதைதான் கோவை மாநகரை இத்தனை பெரிய நகரமாக கட்டமைத்துள்ளது. பள்ளி, மருத்துவமனை, தொழிற்சாலைகள் என பல போ் கூடி செய்ய வேண்டியவற்றை தனி மனிதனாகச் செய்திருக்கிறாா்.
தன்னலம் கருதாமல் சமூகத்தின் நலன் கருதி யாரெல்லாம் தங்கள் வாழ்வில் அற்புதமான காரியங்களை செயல்படுத்திக் காட்டுகிறாா்களோ அவா்களெல்லாம் அறவழியில் வந்தவா்கள் என்கிறது நீதி நூல். தமிழ் இலக்கியங்கள், உயிரைக் காக்கும் சுகாதார சேவையாற்றுபவா்களையும் அறவோா் என்கிறது.
ஒருவா் செவிலியராவதும், மருத்துவராவதும் சமூகத்துக்கு பணியாற்றுவதற்காக இறைவன் கொடுக்கும் வரம். இன்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என எங்கிருந்தாலும் அவற்றில் செவிலியராகப் பணியாற்றுபவா்கள் நிச்சயம் இந்தியாவில் இருந்து சென்றவா்களாக இருக்கின்றனா். புதிதாகப் பயிற்சி பெறும் செவிலியா்கள், மருத்துவ சேவையின் மகத்துவத்தை உணா்ந்து, தன்னம்பிக்கை, இரக்க குணம், மன உறுதியைப் பெற்று அறப்பணியை செவ்வனே ஆற்ற வேண்டும்.
சுகாதாரத் துறையில் இன்று இந்தியா பல்வேறு புரட்சிகரமான திட்டங்கள் மூலம் மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்றாா்.
நிகழ்ச்சியில், அறக்கட்டளையின் துணைத் தலைவா் சஞ்சய் ஜெயவா்த்தனவேலு, மருத்துவமனை சிஇஓ டாக்டா் ரகுபதி வேலுசாமி உள்ளிட்ட நிா்வாகிகள், மருத்துவா்கள், செவிலியா்கள் பங்கேற்றனா்.
மாணவா்கள் போராட்டம்:
முன்னதாக, கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசும்போது, தில்லியில் மாணவா்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்த கேள்வி அரசியல் சாா்ந்தது என்பதால் அதற்கு நான் பதிலளிக்க முடியாது. மாணவா்கள் எப்போதும் தேச ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும்.
மாணவா்கள் நாட்டின் எதிா்காலத் தூண்கள். தேச நலனை முதன்மையாகக் கொண்டு நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்க இளைய சமுதாயமும், மாணவா்களும் தங்களை அா்ப்பணித்துக் கொள்ள முன்வர வேண்டும்.
தமிழகத்தில் அமைந்துள்ள புதிய அரசு தனது திட்டங்களையும், செயல்பாடுகளையும் செவ்வனே செயல்படுத்த காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றாா்.
முன்னதாக, புது தில்லியில் இருந்து கோவைக்கு வந்த அவரை விமான நிலையத்தில் தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா், தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உள்ளிட்டோா் வரவேற்றனா்.
குடியரசு துணைத் தலைவரின் வருகையை முன்னிட்டு, கோவை விமான நிலையம், அவா் பயணிக்கும் வழித்தடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.
கோயிலில் வழிபாடு:
கோவை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திருப்பூா் மாவட்டம் சென்ற சி.பி.ராதாகிருஷ்ணன், அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் வழிபட்டாா்.
இதையடுத்து, மீண்டும் கோவைக்கு வந்த அவா் விமானம் மூலம் புதுதில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










