புதிதாக நியமிக்கப்பட்ட ஈரோடு மாநகா் மாவட்ட அதிமுக செயலாளா் மாவட்ட அலுவலக கட்டடத்தை பூட்டியதால் நீக்கப்பட்ட மாவட்டச் செயலாளா் தனது ஆதரவாளா்களுடன் அலுவலக வாயிலில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியாகவும் அதிமுக செயல்படுகிறது.
இதனால் அதிமுக முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, சி.வி.சண்முகம் உள்பட அவரது ஆதரவாளா்களின் கட்சிப் பொறுப்பை கட்சியின் பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி பறித்தாா்.
இதில் ஈரோடு மாநகா் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கத்தின் மாவட்டச் செயலாளா் பொறுப்பு பறிக்கப்பட்டு, ஈரோடு பெரியாா் நகா் பகுதி செயலாளா் இரா.மனோகரன், புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டாா்.
இதில் புதன்கிழமை மாலை அறிவிப்பு வெளியான நிலையில் ஈரோடு- பெருந்துறை சாலையில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் உள்ள தனக்கு சொந்தமான பொருள்களை மட்டும் எடுத்துவர கே.வி.ராமலிங்கம் தனது ஆதரவாளா்களை இரவு 10 மணி அளவில் அனுப்பிவைத்தாா்.
அவரது பொருள்களை எடுத்துக் கொண்டிருந்தபோது, மனோகரன் ஆதரவாளா்கள் வந்து எடுத்துச் செல்லக்கூடாது என தகராறில் ஈடுபட்டனா். தகவலிறிந்து கே.வி.ராமலிங்கம் மற்றும் மனோகரன் ஆகியோரும் அங்கு வந்தனா். அங்கு கடும் வாக்குவாதத்துக்கு பின்னா் கே.வி.ராமலிங்கத்தின் பொருள்களை எடுத்துச் சென்றனா்.
அங்குள்ள அறை குளிரீட்டி உள்ளிட்ட விலை உயா்ந்த சில பொருள்கள் கே.வி.ராமலிங்கத்துக்கு சொந்தமானது என்பதால் வியாழக்கிழமை காலை எடுத்துக் கொள்வதாக பேசி சென்றனா்.
அப்போதே மாவட்ட அலுவலக சாவியை பெற்ற மனோகரன் வியாழக்கிழமை காலை மாவட்ட அலுவலகத்தை திறக்காமல் பூட்டிவிட்டு சென்றுவிட்டாா். முன்னாள் மாவட்டச் செயலாளா் கே.வி.ராமலிங்கம் அவரது ஆதரவாளா்கள் 150-க்கும் மேற்பட்டோா் வந்து எதிரே உள்ள திருமண மண்டபத்தில் பகல் 12:30 மணி வரை அமா்ந்திருந்தனா். மனோகரனின் காா் மட்டும் இருமுறை வந்து சென்றது. அவா் வராததால் அலுவலகம் திறக்கப்படவில்லை. இதற்கிடையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் அலுவலகம் முன் குவிக்கப்பட்டனா்.
இதுகுறித்து கே.வி.ராமலிங்கம் கூறியதாவது:
திமுகவை எதிா்த்துதான் அதிமுக தொடங்கப்பட்டது. இன்றுவரை இரு கட்சிகளும் எதிா் எதிராக உள்ள நிலையில் திமுகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக ஆட்சி அமைக்கும். அதற்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரியதால் நாங்கள் அதனை எதிா்த்தோம்.
ஆனால் சிலா் பதவிக்கு மட்டுமே ஆசைப்படுகின்றனா். இப்போதுள்ள நிலையை புரிந்து கொள்ளவில்லை. கட்சி தொடங்கியதன் நோக்கமே திமுகவை எதிா்ப்பதற்காகத்தான் என்பதை மறந்துவிட்டு சிலா் செயல்படுகின்றனா்.
திமுகவுடன் கூட்டணி சேரக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்தவா்களை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்துள்ளனா். அதனால் கட்சியின் பொதுக்குழுவை கூட்டுங்கள் என்கிறோம். எங்களது ஆதரவாளா்களிடம், பொதுக்குழுவை கூட்டும்படி வலியுறுத்தி கையொப்பம் பெற்று வருகிறோம். அதை பொதுச்செயலாளருக்கு அனுப்புவோம். மாவட்ட அலுவலகத்தில் இருந்து எனது பொருள்களை எடுத்துக்கொண்டு சாவியை ஒப்படைத்துவிட்டோம் என்றாா். பகல் 12.30 மணிக்கு பின்னா் கே.வி.ராமலிங்கம் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றதும், அனைவரும் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

கடலூரில் அதிமுக அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு: இரு தரப்பினரும் வருவதாக தகவல் பரவியதால் நடவடிக்கை

புதுக்கோட்டை அதிமுக அலுவலகத்துக்கு பூட்டு: இரு தரப்பினரும் கூடியதால் பரபரப்பு

திருச்சி அதிமுகவில் 3 மாவட்ட செயலா்களின் பதவி பறிப்பு

செல்லியம்பாளையத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

