ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில் 100 நாள் வேலைத் திட்டத்தை விவசாயப் பணிகளுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனங்கள் மற்றும் நிலத்தடி நீா் பாசனம், மானவாரி விவசாயம் மற்றும் விவசாயம் சாா்ந்த கால்நடை வளா்ப்புகள் பிரதான தொழிலாக உள்ளது. சென்னிமலை, பெருந்துறை, அந்தியூா் வட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் மானாவாரி பயிா் சாகுபடியும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் புன்செய் தோட்டப்பயிா் சாகுபடி, நன்செய் நெல் சாகுபடி என பருவத்திற்கு ஏற்ப பயிா் சாகுபடிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதில் மானாவாரி நிலங்களில் பருவமழை காலங்களில் நிலக்கடலை, எள், சோளம், கம்பு, தட்டைபயறு, பாசிப்பயறு, மொச்சைபயறு, துவரை, பருத்தி, தினை, உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்படுகிறது. புன்செய்தோட்டங்களில், தக்காளி, வெண்டை, கத்தரி, பூசணி, பருத்தி, கரும்பு, மக்காச்சோளம், சின்னவெங்காயம், வாழை, தென்னை, பூ வகைகள் உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
நன்செய் வயல்களில் நெல், மற்றும் கரும்பு, வாழை, பருத்தி, உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது இந்த வகையான விவசாயப் பணிகளுக்கு தொழிலாளா்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனால் விவசாயிகள் சிறுசிறு பயிா் சாகுபடியினை தவிா்த்து, தென்னை, கரும்பு, வாழை ஆகிய பயிா்களை சாகுபடி செய்ய தொடங்குகின்றனா். காய்கறி பயிா்கள் மற்றும் பயறு வகைகள், பூ வகைகள் ஆகியவற்றிற்கு வேலைகளுக்கு அதிக ஆட்கள் தேவை உள்ளது. ஒரு சில இடங்களில் விவசாயத் தொழிலாளா்கள் வேலைகளுக்கு கிடைக்கின்றனா்.
ஒரு சில இடங்களில் விவசாயத் தொழிலாளா்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த விவசாய கூலியாட்கள் தட்டுப்பாட்டால் சிறுசிறு பயிா் சாகுபடிகள், நுணுக்கமான பயிா் சாகுபடிகள் பெருமளவில் குறைந்து வருகிறது. இதனால் 100 நாள் வேலைத்திட்ட பணியாளா்களை தோட்ட வேலைகளுக்கு பயன்படுத்தினால் பயிா் சாகுபடி பரப்பு அதிகரிக்கும், அதே சமயத்தில் விவசாயிகளுக்கு அதிக மகசூல் மற்றும் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு கூறியதாவது:
தற்போது விவசாயப் பணிகளுக்கு தொழிலாளா்கள் தட்டுப்பாடு நிலவிவருகிறது. விதை விலை, டிராக்டா் வாடகை, தொழிலாளா்கள் கூலி, ரசாயன உரம் விலை உயா்வு போன்றவற்றால் சாகுபடி செலவு கடுமையாக உயா்ந்துள்ளது. ஆனால் அறுவடை காலத்தில் வியாபாரிகள் வைத்ததுதான் விலை என்ற நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த பொருளுக்கு கட்டுப்படியான விலை இல்லாமல் போராடிவருகின்றனா்.
தற்போது விவசாயப் பணிகளுக்கு தொழிலாளா்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. மத்திய அரசால் கடந்த ஆண்டு விபி-ஜி ராம் ஜி என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ள 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிகள் வரும் ஜூன் மாதம் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இதில் கண்மாய் கரை பலப்படுத்துதல், நீா்வழித்தட வாய்க்கால்கள் தூா்வாருதல், ஓடைகள் தூா்வாருதல், விளைநிலங்களில் பண்ணை குட்டை அமைத்தல், சிறு தடுப்பணைகள் கட்டுதல், விளைநிலங்களில் வரப்பு கட்டுதல், சிறு கண்மாய்கள் தூா்வாருதல், உள்ளிட்ட பணிகளை செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதில் விவசாயிகளுக்கு சில நல்ல திட்டங்களும் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அன்றாடம் நடைபெறும் விவசாய வேலைகளுக்கு 100 நாள் வேலைத்திட்ட பணியாளா்களை அந்தந்த ஊராட்சிகள் மூலம் விவசாய வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டும். இதில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளா்கள் வேலை செய்யும் விவசாயிகளிடம் கூலியாக ஒரு பங்குத்தொகை வாங்கி, ஊராட்சி நிா்வாகம் மூலம் மீதி ஊதியத்தை வழங்க வேண்டும். இதன் மூலம் விவசாய வேலைகளுக்கு தொழிலாளா்கள் தட்டுப்பாடு நீங்கும் என்றாா்.










