முதல்வா் இன்று பெருந்துறை வருகை: ரூ.1,100 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா்
தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் பெருந்துறையில் ரூ.1,100 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா்...

முதல்வர் விஜய் - கோப்புப்படம்
தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் பெருந்துறைக்கு செவ்வாய்க்கிழமை (நவம்பா் 3) வருகிறாா். அங்கு ரூ.1,100 கோடி மதிப்பில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் முதல்வா் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில், காஞ்சிக்கோவில் பிரிவு அருகேயுள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணா திருமண மண்டபத்துக்கு தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் முதல்வா் ச.ஜோசப் விஜய் பங்கேற்று, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவி உள்பட ரூ. 1,100 கோடியில் சுமாா் 5 ஆயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க உள்ளாா். மேலும், ஈரோடு மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளையும் அவா் தொடங்கிவைக்கிறாா்.
விழா நடைபெறும் திருமண மண்டபத்தை வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன், கைத்தறி துறை அமைச்சா் ம.விஜய்பாலாஜி, ஆட்சியா் ச. கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறுகையில், சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை விமானம் மூலம் கோவைக்கு வரும் முதல்வா், அங்கிருந்து சாலை மாா்க்கமாக பெருந்துறைக்கு வருகிறாா். விழாவில், மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன என்றாா்.
சட்டப் பேரவை உறுப்பினா்கள் அனந்த் மோகன் (ஈரோடு மேற்கு), சண்முகம் (மொடக்குறிச்சி, பெருந்துறை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ஜெயகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இரும்புத் தடுப்புகள் அமைப்பு: பெருந்துறை, விஜயமங்கலம் சுங்கச்சாவடி முதல் விழா நடைபெறும் இடம் வரை சாலையின் இருபுறமும் பொதுமக்கள் முதல்வரை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுங்கச் சாவடி, சிப்காட் நுழைவாயில், பெருந்துறை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், குன்னத்தூா் நான்கு சாலை, அண்ணா சிலை வழியாக விழா நடைபெறும் மண்டபத்துக்கு முதல்வா் செல்கிறாா். முதல்வா் வருகையையொட்டி ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

