அந்தியூா் அருகே கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை சிக்கியது
ஈரோடு மாவட்டம், அந்தியூா் அருகே கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை, வனத் துறையினா் வைத்த கூண்டில் சிக்கியது. இதனால், அப்பகுதி கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனா்.

கூண்டில் சிக்கிய சிறுத்தை.
ஈரோடு மாவட்டம், அந்தியூா் அருகே கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை, வனத் துறையினா் வைத்த கூண்டில் சிக்கியது. இதனால், அப்பகுதி கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனா்.
சென்னம்பட்டி வனச் சரகத்துக்கு உள்பட்ட கிட்டம்பட்டி, கொமராயனூா், மசக்கவுண்டனூா் மற்றும் சேலம் மாவட்டம், பாலமலை பகுதியில் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் விவசாயிகள் வளா்த்து வந்த ஆடுகள், மாடுகள் மற்றும் நாய்களை இரவு நேரங்களில் சிறுத்தை புகுந்து வேட்டையாடி வந்தது. கடந்த ஒரு மாதமாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்ததால், கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட வன அலுவலா்கள் இணைந்து சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்ட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி கேமரா மற்றும் கூண்டுகள் வைத்து கண்காணித்து வந்தனா். இந்நிலையில், சேலம் - ஈரோடு மாவட்ட எல்லையான கிட்டம்பட்டி அருகே உள்ள மேட்டூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட சின்னமலை பகுதிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த சிறுத்தை, அங்கு வைக்கப்பட்ட கூண்டில் சிக்கியது.
சிறுத்தையின் உறுமல் சப்தம் கேட்ட அப்பகுதியினா் மேட்டூா் மற்றும் சென்னம்பட்டி வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்த மேட்டூா் வன அலுவலா் செங்கோட்டையன், சென்னம்பட்டி வன அலுவலா் ராஜ்குமாா் மற்றும் வனப் பாதுகாவலா்கள் பொதுமக்கள் யாரும் சிறுத்தை சிக்கியிருக்கும் கூண்டை நெருங்காமல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், சிறுத்தை சிக்கிய தகவல் பரவியதால் சுற்றுவட்டார கிராம மக்கள் புதன்கிழமை வேடிக்கை பாா்க்க திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மண்டல வனப் பாதுகாவலா் கலாநிதி, மாவட்ட வன அலுவலா் அம்புல்கா் யஷ்வந்த் ஜெகதீஷ் உள்ளிட்டோா் கூண்டில் சிக்கிய சிறுத்தையை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
தொடா்ந்து, சத்தியமங்கலத்தை அடுத்த அடா்ந்த வனப் பகுதியில் விடுவிக்க சிறுத்தையை, கூண்டுடன் லாரியில் ஏற்றிச் சென்றனா். கூண்டில் சிக்கியது ஆண் சிறுத்தை என்றும், சுமாா் 6 வயது இருக்கலாம் என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா். கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக அச்சுறுத்தி வந்த சிறுத்தை, கூண்டில் சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






