
மேட்டூர் அருகே 3 மாதங்களாக கிராம மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது!
மேட்டூர் அருகே 3 மாதங்களாக அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டதால் கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
பிடிபட்ட சிறுத்தை. - (கோப்புப்படம்)
மேட்டூர் அருகே 3 மாதங்களாக அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டதால் கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கண்ணாமூச்சி வனப்பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக சிறுத்தை ஒன்று நடமாடி வந்தது. வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் குடியிருப்புகளில் வளர்க்கப்பட்டு வந்த கோழிகள், ஆடுகள், நாய்கள், கன்றுகளை சிறுத்தை வேட்டையாடி கொன்றது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள்அச்சம் அடைந்தனர்.
மேட்டூர் வனச்சரகர் செங்கோட்டையன், சென்னம்பட்டி வனச்சரகர் ராஜ்குமார் மற்றும் சேலம், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த வனத்துறையினர் இணைந்து சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். நான்கு இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டன. எட்டு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
நீண்ட நாட்களாக சிறுத்தை பிடிபடாத காரணத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஈரோடு சேலம் மாவட்ட சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சிறுத்தையைப் பிடிக்க சேலம், ஈரோடு மாவட்ட வனத்துறையினரும் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
நேற்றிரவு கண்ணாமூச்சி வனப்பகுதியை ஒட்டிய மிளகாய் பொதை பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கியது. இந்தச் சிறுத்தையின் வயது என்ன?, ஆண் சிறுத்தையா?, பெண் சிறுத்தையா என்பதை தெரியவில்லை.சிறுத்தை ஆக்ரோஷமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் வந்த பிறகு அது குறித்து விவரங்கள் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
சேலம் மாவட்ட வன அலுவலர் அம்பலகர் எஸ்வந்த் ஜெகதீஷ் தலைமையில் கூண்டில் உள்ள சிறுத்தையை பாதுகாப்பாக அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சிறுத்தையை காண கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். ஏராளமான வனத்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் உள்ள புலிகள் விரட்டிய காரணத்தால் மேட்டூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட சின்னமலைக்கு வந்து பட்டப் பகலில் கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்த சிறுத்தை பிடிபட்டதால் கண்ணாமூச்சி சுற்றுவட்டார கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.
Summary
Villagers are relieved that the leopard, which had been posing a threat near Mettur for three months, has been captured.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




