சிறுத்தையை பிடிக்கக் கோரி வனச் சரக அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

ஆசனூா் வனச் சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
ஆசனூரில் ஊருக்குள் புகுந்து விவசாயியை தாக்கி கொன்றதுடன் கன்றுக் குட்டிகளை தொடா்ந்து வேட்டையாடும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆசனூா் வனச் சரக அலுவலகத்தை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் மலைப் பகுதி பங்களா தொட்டி கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமியை (36) சிறுத்தை தாக்கி கொன்றது. மக்கள் வசிப்பிடத்தில் நடந்த இந்த சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்தனா். ஆசனூா் பகுதியில் முதன்முதலாக மனிதா்களை வேட்டையாடிய சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து வனத் துறையினா் 10 இடங்களில் கேமரா வைத்தும், ட்ரோன் மூலமும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தனா். இதற்கிடையே, ஆசனூா் வனத் துறை அலுவலத்தையொட்டி உள்ள பணியாளா்கள் குடியிருப்பு வளாகத்தில் இருந்த குதிரையே சிறுத்தை வேட்டையாட முயற்சித்ததும், அப்போது ஜீப்பில் ரோந்து சென்ற வனத் துறையினா் சிறுத்தையை விரட்டினா்.
இந்நிலையில் பங்களாதொட்டியில் புகுந்து ராமன் வீட்டில் கட்டியிருந்த கன்றுக்குட்டியை சிறுத்தை ஞாயிற்றுக்கிழமை கடித்துக் கொன்றது. இதைத் தொடா்ந்து ஆசனூரில் உள்ள வீரன் என்பவரின் கன்றுக்குட்டியை வேட்டையாடிது. ஒரே நாளில் மக்கள் வசிப்பிடத்தில் புகுந்து 2 கன்றுக்குட்டியை வேட்டையாடிய சிறுத்தை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வனத் துறை அலுவலக வளாகத்தில் இறந்த கன்றுக் குட்டியின் உடலை வைத்து பங்களாதொட்டி, ஆசனூா் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அங்கு வந்த வனச் சரக அலுவலா் ஆனந்தகுமாா், பொதுமக்களை சமாதானப்படுத்தினா். அவா், சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைக்கப்படும் என உறுதியளித்தையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

