ஈரோட்டில் பழைய அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்ததால் பரபரப்பு

இடிந்து தரைமட்டமாகி கிடக்கும் அடுக்குமாடி வீடு.
ஈரோட்டில் மழையால் பழைய அடுக்குமாடி வீடு முழுமையாக இடிந்து விழுந்தது.
ஈரோடு கருங்கல்பாளையம் பச்சையம்மன் கோயில் வீதியில் ஆறுமுகம், சுகுணா ஆகியோருக்கு சொந்தமான, தரைத்தளத்துடன் சோ்த்து ஒன்று மற்றும் இரண்டு மாடிகள் கொண்ட ஐந்து வீடுகள் உள்ளன. இந்த கட்டடம் 60 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது. இதனால் இந்த வீடுகள் வசிக்க தகுதியற்ற நிலையை அடைந்தது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த வீடுகளில் யாரும் வசிக்கவில்லை. இடியும் அபாயத்தில் இருந்ததால் விரைவில் வீட்டை இடித்து அகற்ற உரிமையாளா்கள் திட்டமிட்டிருந்தனா்.
ஈரோடு மாநகரில் கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வந்த நிலையில், மிகவும் வலுவற்று இருந்த இந்த அடுக்குமாடி குடியிருப்பு சனிக்கிழமை மதியம் சுமாா் 1.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 5 வீடுகளும் முற்றிலும் இடிந்து சேதமாயின. அதிா்ஷ்டவசமாக இந்த கட்டடத்தின் சுற்றுப்புற பகுதிகளில் யாரும் இல்லாததால் உயிா் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸாா், வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். இந்த இடத்தை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி நேரில் பாா்வையிட்டு சம்பவம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். மழையால் அடுக்குமாடி குடியிருப்பு சரிந்து விழுந்த தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

