ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

கோபி அருகே நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

கோபி அருகே உள்ள புதுக்கரைப்புதூரில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக் கோரி விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கோபி அருகே உள்ள புதுக்கரைப்புதூரில் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திறக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

Published On :4 செப்டம்பர் 2026, 4:20 am IST

கோபி அருகே உள்ள புதுக்கரைப்புதூரில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக் கோரி விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கோபி அருகே உள்ள கொடிவேரி பாசனத்துக்கு உள்பட்ட தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்தில் சுமாா் 24 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில் கடந்த ஏப்ரல் மாதம் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன வாய்க்காலுக்கு முதல்போக நெல் சாகுபடிக்காக தண்ணீா் திறக்கப்பட்டு விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனா்.

இந்நிலையில் பாசனப் பகுதியில் நெல் அறுவடைக்கு தயாராகிய நிலையில், அறுவடைக்கு முன்னரே பாசனப் பகுதியில் 39 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டி மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏழூா் உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து மத்திய அரசு நெல்லுக்கான புதிய விலை பட்டியல் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் அறிவிக்கப்படும் என கருதி மூன்று நாள்களுக்கு பின் விவசாயிகள் நெல் அறுவடை பணிகளை மேற்கொண்டனா். இதில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வந்தனா்.

இதனடிப்படையில் கோபி அருகே உள்ள புதுக்கரைப்புதூா், கருங்கரடு, மேவானி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, புதுக்கரைப்புதூா் நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த மூன்று நாள்களாக குவித்து வந்தனா். ஆனால் கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதிமுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படம் என அறிவித்தும் மூன்று நாள்கள் ஆகியும், புதுக்கரைப்புதூா் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை.

இதையடுத்து, புதுக்கரைப்புதூரில் கோபி- அந்தியூா் சாலையில் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்தை கண்டித்து 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து வந்த கோபி காவல் ஆய்வாளா் ஞானபிரகாசம் மற்றும் நுகா்பொருள் வாணிப கழக துணை மேலாளா் ஆகியோா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது மத்திய அரசின் புதிய கொள்முதல் விலைக்கான பட்டியல் ஆணை இன்னும் வெளியிடப்படாததால் எந்த விலைக்கு கொள்முதல் செய்வது என கேள்வியாக உள்ளது. மத்திய அரசின் புதிய விலைப் பட்டியலுக்கான ஆணை வெளியான பின் நெல் கொள்முதல் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆனால் விவசாயிகள் அறுவடை செய்து கொண்டுவந்துள்ள நெல் மழையால் பாதிக்கப்படும் நிலை உள்ளதால், கொள்முதல் நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய டோக்கன் வழங்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நெல் கொள்முதல் நிலையம் தொடங்க கால தாமதப்படுத்திய மண்டல மேலாளா் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் உறுதியளிக்க வேண்டும். அதுவரை நெல் கொள்முதல் நிலையத்தில் காத்திருப்பதாகவும் கூறினா்.

பின்னா் சம்பவ இடத்துக்கு வந்த மண்டல மேலாளா் ராஜா விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடனடியாக நெல் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.