உதகையில் புதன்கிழமை நடைபெற்ற 72 ஆவது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசியக் கொடியை ஏற்றிவைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
உதகை அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் 72 ஆவது சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. உதகையில் கடந்த பல நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில், புதன்கிழமை காலையில் தூறல் மழைக்கு நடுவே மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதனையடுத்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.
முன்னதாக நீலகிரி மாவட்டத்திலுள்ள ஒரே சுதந்திரப் போராட்ட தியாகியான ஹள்ளி கவுடரின் இல்லத்துக்கு நேரில் சென்ற வருவாய்த் துறை அலுவலர்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தின் மூலம் 2 மகன்களை ராணுவத்துக்கு அனுப்பியமைக்காக பெற்றோருக்கு போர் பணி ஊக்க மானியமாக ரூ. 25,000 மும், முன்னாள் படைவீரர் மகன்களை ராணுவத்தில் அலுவலர் பயிற்சியில் சேர்த்தமைக்கு வழங்கப்படும் தொகுப்பு மானியமாக ரூ.1 லட்சமுமாக 2 பயனாளிகளுக்கு ரூ.1.25 லட்சம் மதிப்பிலும், வருவாய்த் துறை சமூக பாதுகாப்புத் திட்டத்தின் முதியோர் உதவித் தொகை, உழவர் பாதுகாப்புத் திட்ட முதியோர் உதவி தொகையாக தலா ஒரு பயனாளிக்கு மாதந்தோறும் ரூ.1000 வீதம் 2 பயனாளிகளுக்கு அதற்கான ஆணைகளையும் ஆட்சியர் வழங்கினார்.
அதேபோல, முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் வைப்புத்தொகை பத்திரம் தலா ஒரு பயனாளிக்கு ரூ.50,000 வீதம் 2 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சமும், தாட்கோ மூலம் 1 பயனாளிக்கு ரூ.2.25 லட்சம் மதிப்பில் டூரிஸ்ட் வாகனமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.8,846 மதிப்பிலான எம்பிராய்டரி இயந்திரமும், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ. 31,000 மதிப்பிலான நவீன செயற்கை காலும், பட்டதாரி மாற்றுத்திறனாளியை நல்ல நிலையில் உள்ள நபர் திருமணம் செய்து கொள்ளும் திட்டத்தின் கீழ் ரூ.50,000 என மொத்தம் 2 பயனாளிகளுக்கு ரூ. 81,000 மதிப்பிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.5,000 மதிப்பிலான சலவை பெட்டியுமாக மொத்தம் ரூ.5 லட்சத்து 68,846 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
மேலும் அண்மையில் மந்தாடா பகுதியில் நிகழ்ந்த அரசுப் பேருந்து விபத்தின்போது சிறப்பாக பணியாற்றியதற்காக காவல் துறையினர் 32 பேருடன், தீயணைப்புத் துறையினர், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 80 பேருக்கு சிறப்பு சான்றிதழ்களையும், மாவட்டத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 160 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற தோடர் மற்றும் கோத்தர் இன பழங்குடியினரின் பாரம்பரிய நடனங்களோடு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளையும் ஆட்சியர் பார்வையிட்டு, சிறப்பான கலை நிகழ்ச்சிகளை நடத்தியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
அதேபோல, அரசுத்துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக உதகை நகராட்சி ஆணையர் சி.ரவி மற்றும் தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் உள்ளிட்டோருக்கும் ஆட்சியர் சிறப்பு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் அமர் குஷ்வா , மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், மாவட்ட வன அலுவலர் சோமன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் மற்றும் காவல்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குன்னூரில்...
குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், கோட்டாட்சியர் பத்ரிநாத் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். கன்டோண்மென்ட் அலுவலகத்தில் முதன்மை நிர்வாக அதிகாரி ஹரிஷ் வர்மா தேசியக் கொடியை ஏற்றிவைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆணையர் சரஸ்வதி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இதேபோல, சுற்றுலா வாகன ஓட்டுநர் சங்கம், ஆட்டோ ஓட்டுநர் சங்கம், வியாபாரிகள் சங்கம் ஆகியன சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
அரசியல் கட்சிகள் சார்பில்...
சுதந்திர தினத்தையொட்டி உதகை காங்கிரஸ் கட்சி அலுவலகம் எதிரே புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து உதகை சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.கணேஷ் மரியாதை செலுத்தினார். இதில், கட்சியின் நகரத் தலைவர் பி.கே.ஜி.கெம்பையா, உதகை ரவிக்குமார், மாவட்ட ஊடகப் பிரிவு செயலர் சிஎம்பி ராஜா, சாதிக், பீமராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
அதேபோல, மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் சுஞ்சையா தேசியக் கொடியேற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலர் ராஜரத்தினம், நகரத் தலைவர் சுகுமாரன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக கட்சியின் அலுவலகத்தில் உள்ள காந்தியடிகள், காமராஜர் ஆகியோரின் புனித அஸ்திக் கலசங்களுக்கு சிறப்பு பிரார்த்தனையும், பூஜையும் நடைபெற்றன. பின்னர் மத ஒற்றுமையை வலியுறுத்தி உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
கூடலூர் நகராட்சி அலுவலகத்தில்...
கூடலூர், ஆக. 15: கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் நகராட்சி ஆணையர் கி.சு. பார்வதி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து, கூடலூர் நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய சுகாதாரப் பிரிவு துப்புரவு பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், குடிநீர் பிரிவு பணியாளர்கள், குப்பையைப் பிரித்து வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் பரப்புரையாளர்கள், ஓட்டுநர்கள், வரிவசூல் மற்றும் இதர பணியாளர்களை பாராட்டி நகராட்சி ஆணையர் ஊக்கப் பரிசு வழங்கினார்.
இதேபோல, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பொது இடங்களிலும் சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.