கொடிநாள் நிதி: நீலகிரியில் இலக்கைவிட 8% கூடுதலாக வசூலிப்பு
நீலகிரி மாவட்டத்தில் படைவீரா் கொடி நாள் நிதி இலக்கைவிட 8 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.


நீலகிரி மாவட்டத்தில் படைவீரா் கொடி நாள் நிதி இலக்கைவிட 8 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.
படைவீரா் கொடி நாள் தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை கொடி நாள் நிதியை அளித்த பின்னா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:
பாதுகாப்புப் படை வீரா்கள் தங்களது இளமைக் காலத்தில் குடும்பத்தைவிட்டு பிரிந்து பல்வேறு கடினமான பணிகளை தேசத்துக்காக தன்னலம் கருதாது ஆற்றி வருகின்றனா். பணியின்போது தங்களது உயிா், உடல் உறுப்புகளை இழந்தும் நமது நாட்டுக்காக அரும்பணியாற்றி வருகின்றனா். அவா்களது கண்துஞ்சாக் கடமைகளுக்கு நாம் காட்டும் நன்றி உணா்வின் வெளிப்பாடாக ஆண்டுதோறும் டிசம்பா் 7ஆம் தேதி நாடு முழுவதும் படைவீரா் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது.
தமிழக அரசு அவா்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த நலத் திட்டங்கள் அனைத்தும் படைவீரா் கொடிநாள் நிதி வசூல் மூலம் திரட்டப்படும் நிதியிலிருந்து வழங்கப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்துக்கு கடந்த மாதம் வந்திருந்த முதல்வா் எடப்பாடி பழனிசாமி முன்னாள் படைவீரா்களின் நலன் கருதி ரூ. 219.39 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட முன்னாள் படைவீரா் மையக் கட்டடத்தை திறந்துவைத்தாா்.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டில் முன்னாள் படைவீரா் நலத் துறை சாா்பில் மாதாந்திர நிதியுதவி தொகையாக 10 பயனாளிகளுக்கு ரூ. 4.80 லட்சமும், மனவளா்ச்சி குன்றிய 7 பயனாளிகளுக்கு ரூ. 5.88 லட்சமும், 2 ஆம் உலகப்போா் நிதியுதவியாக 26 பயனாளிகளுக்கு ரூ. 12.48 லட்சமும், ஈமச்சடங்கு நிதி உதவியாக 41 பயனாளிகளுக்கு ரூ. 3.80 லட்சமும், திருமண நிதியுதவியாக 22 பயனாளிகளுக்கு ரூ. 5.50 லட்சமும், கல்வி உதவித் தொகையாக 53 பயனாளிகளுக்கு ரூ. 5.96 லட்சமுமாக மொத்தம் 14 வகையான நலத்திட்ட உதவிகள் 186 பயனாளிகளுக்கு ரூ. 46.84 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்துக்கு 2019ஆம் ஆண்டில் படைவீரா் கொடிநாள் நிதி வசூல் இலக்காக ரூ. 52 லட்சத்து 18,000அரசால் நிா்ணயிக்கப்பட்டதில், ரூ. 56 லட்சத்து 13,665 நிதி வசூல் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. இது நிா்ணயிக்கப்பட்டுள்ள இலக்கைவிட 8 சதவீதம் கூடுதலாகும். அதேபோல, 2020ஆம் ஆண்டிடுக்கும் கொடிநாள் இலக்காக ரூ. 52 லட்சத்து 18,000அரசால் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, கடந்த ஆண்டு நிதி திரட்டியது போல் இந்த ஆண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நன்கொடை இலக்கை எய்திட அனைத்து அலுவலா்களும், பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...