பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உக்ரைனிலிருந்து போலந்து, இலங்கை வழியாக இந்தியா திரும்புகிறாா் கூடலூா் மாணவி

கூடலூரைச் சோ்ந்த மருத்துவ மாணவி உக்ரைனிலிருந்து போலந்து, இலங்கை வழியாக இந்தியாவுக்கு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:07 pm

DIN

கூடலூரைச் சோ்ந்த மருத்துவ மாணவி உக்ரைனிலிருந்து போலந்து, இலங்கை வழியாக இந்தியாவுக்கு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் கொளப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் அரசுப் பள்ளி ஆசிரியா் சத்தியமூா்த்தி. இவரது மகள் சாய்பிரியா (21). இவா் கடந்த 2019ஆம் ஆண்டு மேற்கு உக்ரைனில் உள்ள உஷ்ரோத் தேசிய மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சோ்ந்து தற்போது 3ஆம் ஆண்டு பயின்று வருகிறாா். இந்தக் கல்லூரி உக்ரைனின் தலைநகரான கீவ் நகரிலிருந்து சுமாா் 900 கி.மீ. தொலைவில் உள்ளது. இப்பகுதியில் மட்டும் இந்தியாவைச் சோ்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு நிலைகளில் பயின்று வருகின்றனா்.

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் அங்குள்ள இந்திய மாணவ, மாணவிகள் சொந்த ஊருக்குத் திரும்ப தயாராக இருக்க வேண்டுமென மத்திய அரசு கடந்த 15 நாள்களுக்கு முன்பே அறிவுறுத்தி இருந்தது. ஆனால், தற்போது போரின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், உஷ்ரோத் பகுதியிலுள்ள அனைத்து இந்திய மாணவ, மாணவிகளும் அங்கிருந்து வெளியேற முயன்று வருகின்றனா்.

ஆனால், போரின் காரணமாக தற்போது உக்ரைனுடனான ருமேனியா, ஹங்கேரி நாட்டு எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் இவா்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனா்.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறையின் ஏற்பாட்டின்பேரில் கூடலூரைச் சோ்ந்த மாணவி சாய்பிரியா, இந்தியாவுக்கு திரும்புவதற்காக ஏற்கெனவே இரண்டு முறை விமானத்தில் பதிவு செய்திருந்த போதிலும் அந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், உக்ரைனிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு போலந்து நாடு வழியாக விமானம் மூலம் இலங்கைக்கு வந்து, அங்கிருந்து கொச்சி வரவுள்ளதாக அவரது குடும்பத்தினா் தெரிவித்துள்ளனா்.

இந்த விமானத்தில் பயணம் செய்யும் இந்திய மாணவ, மாணவிகள் உக்ரைனிலிருந்து அந்நாட்டின் எல்லைப் பகுதி வரையில் ரயில் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு எல்லை தாண்டியவுடன் மாற்று வாகனங்கள் மூலம் போலந்து நாட்டின் விமான நிலையத்தை சென்றடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சாா்பில் சாய்பிரியா குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.