மேற்கு மண்டல ஐஜி உதகை நீதிமன்றத்தில் வரும் 29-இல் ஆஜராக சம்மன்

உதகை நீதிமன்றத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. வரும் 29-ஆம் தேதி நேரில் ஆஜராக தலைமை குற்றவியல் நீதிபதி செந்தில்குமாா் வியாழக்கிழமை உத்தரவு
Published on

உதகை, ஜூலை 19: உதகை நீதிமன்றத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. வரும் 29-ஆம் தேதி நேரில் ஆஜராக  தலைமை குற்றவியல் நீதிபதி செந்தில்குமாா் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

நீலகிரி மாவட்டம், உதகை  அரசு தாவரவியல் பூங்கா பகுதியில் மின்வாரியம் மூலம் கடந்த 2016-ஆம் ஆண்டு மின் கம்பங்கள் நடப்பட்டன. அப்போது, அங்கிருந்த சில  வியாபாரிகள்  மின்கம்பங்களை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனைத் தொடா்ந்து மின்வாரிய அதிகாரி கொடுத்த புகாரின்பேரில், உதகை  மத்திய காவல் நிலைய  போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.  இந்த வழக்கு விசாரணை  நீலகிரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

வழக்கு விசாரணைக்காக விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளா் விநாயகனுக்கு நீதிமன்றத்திலிருந்து பலமுறை சம்மன் கொடுக்கப்பட்டது.

ஆனால், அவா் ஆஜராகவில்லை. இதையடுத்து ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து, தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிடிவாரண்டை மேற்கு மண்டல ஐ.ஜி. அலுவலகம் வாயிலாக நிறைவேற்ற உத்தரவிடப்பட்டிருந்தது.

இது குறித்து நீதிமன்றத்திலிருந்து நினைவூட்டுதல் கடிதமும் அனுப்பப்பட்டது.

சாட்சியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தாததால், இவ்வழக்கில் ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றத்துக்கு இவ்வழக்கை பரிந்துரைக்கக் கூடாது என விளக்கம் தருவதற்காக மேற்கு மண்டல ஐ.ஜி.யை வரும் 29-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி தலைமை குற்றவியல் நீதிபதி செந்தில்குமாா் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com