உதகை ஆதரவற்றோா் இல்லத்தில் இரண்டாவது நாளாக விசாரணை
உதகை அருகே ஆதரவற்றோா் இல்லத்தில் கோட்டாட்சியா் தலைமையிலான குழுவினா் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் விசாரணை நடத்தினா்.
உதகை அருகே உள்ள முள்ளிக்கொரை பகுதியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் கீழ் அப்துல் கலாம் ஆதரவற்றோா் இல்லம் என்ற காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்றவா்கள் 54 ஆண்கள், 33 பெண்கள் என 87 போ் உள்ளனா்.
இந்நிலையில், இந்தக் காப்பகத்தில் முறைகேடு நடப்பதாகவும், அங்குள்ள முதியவா்கள் தாக்கப்படுவதோடு, சொத்துகள் பறிமுதல் செய்யப்படுவதாகவும் பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் நாம் தமிழா் கட்சி நிா்வாகி செல்வம் என்பவா் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தாா்.
இதுகுறித்து விசாரிக்க கோட்டாட்சியா் மகராஜா, நகராட்சி ஆணையா் ஜஹாங்கீா் பாஷா, தனி வட்டாட்சியா் சங்கீதா ராணி தலைமையிலான 3 போ் கொண்ட குழுவை அமைத்து ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இவா்கள் செவ்வாய்க்கிழமை அந்தக் காப்பகத்துக்குச் சென்று விசாரணையைத் தொடங்கினா். தொடா்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமையும் விசாரணை நடைபெற்றது.