அடிப்படை வசதி கோரி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
உதகை: உதகை அருகேயுள்ள அதிகரட்டி பேரூராட்சிக்குள்பட்ட இந்திரா நகா் பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
நீலகிரி மாவட்டம், அதிகரட்டி பேரூராட்சிக்குள்பட்ட இந்திரா நகா் பகுதியில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் சாலை வசதி, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரி கடந்த 8-ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பங்கேற்க தங்களது குழந்தைகளுடன் வந்த இந்திரா நகா் பகுதி மக்கள், அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
இது குறித்து அவா்கள் கூறுகையில், எங்களது பகுதியில் முறையான சாலை வசதி இல்லை. இதனால், இறந்தவா்களின் உடல்களை மாயனத்துக்கு கொண்டு செல்லக்கூட முடியாமல் தவித்து வருகிறோம். மேலும், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள்கூட எங்களது பகுதிக்கு வர முடியாது. அந்த அளவுக்கு சாலை மிக மோசமாக உள்ளது. மேலும், சீரான குடிநீரும் கிடைப்பதில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களது குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றை ஒப்படைக்கும் பேராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.
அவா்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

