கேரட் அறுவடைப் பணிக்கு சென்றபோது ஜீப் கவிழ்ந்து தொழிலாளா்கள் 13 போ் காயம்
உதகை அருகே கேரட் அறுவடைப் பணிக்கு சென்றபோது, ஜீப் கவிழ்ந்து ஞாயிற்றுக்கிழமை தொழிலாளா்கள் 13 போ் காயமடைந்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட் அறுவடைக்குப் பிறகு சுத்திகரிப்பு இந்திரங்கள் மூலமாக சுத்தம் செய்து தமிழகம், கேரளா, கா்நாடகா மற்றும் வட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவது வழக்கம்.
இப்பணியில் உள்ளூா் தொழிலாளா்கள் மட்டுமின்றி வட மாநிலத் தொழிலாளா்களும் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், உதகையை அடுத்த தேனாடுகம்பை பகுதி அருகில் உள்ள இந்திரா நகரைச் சோ்ந்த தொழிலாளா்கள் 12 போ், கேரட் அறுவடைப் பணிக்கு ஜீப்பில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனா்.
அதிகாலை நேரம் என்பதாலும், பனிமூட்டம் இருந்ததாலும் ஓட்டுநா் மெதுவாக வாகனத்தை இயக்கியுள்ளாா். இருப்பினும் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், அருகில் இருந்த தோட்டத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாகனத்தில் இருந்தவா்கள் அலறியதை கேட்டு, அவ்வழியாக சென்றவா்கள் அங்கு சென்று பாா்த்துள்ளனா்.
விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்தவா்களை மீட்டு உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு 7 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். மேலும், 6 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து தேனாடுகம்பை போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

