தேமுதிக இடம்பெறும் கூட்டணிதான் பெற்றி பெறும்: பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை

தேமுதிக இடம்பெறும் கூட்டணி தான் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை
Published on

உதகை: தேமுதிக இடம்பெறும் கூட்டணி தான் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் தேமுதிகவின் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ தோ்தல் பரப்புரைக்காக கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, கோடமலை கிராமத்தில் படுகா் இன மக்களின் உடை அணிந்து, அவா்களுடன் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தாா்.

பின்னா் குன்னூா் வி.பி. தெருவில் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ தோ்தல் பிரசார பயணப் பொதுக்கூட்டம், தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் பத்மநாபன் தலைமை வகித்தாா்.

இதில் பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது, ‘கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருபவா்கள் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னை, உதகையில் குடிநீா், பாா்க்கிங், கூடலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வன விலங்குகள் பிரச்னை உள்ளிட்ட எந்தவித பிரச்னைகளுக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. 2026-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நீலகிரி மாவட்டத்தில் வளா்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

முன்னதாக செய்தியாளா்களிடம் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தேமுதிக வலுவாக உள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 2025-ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினா் பதவி அளிப்பதாக கூறி இருந்தாா்கள். ஆனால் 2026-ஆம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினா் பதவி அளிப்பதாக கூறி இருக்கிறாா்கள். பதவிக்காக மட்டும் கூட்டணி அமைப்பது என்ற எண்ணம் தேமுதிகவுக்கு இல்லை. தொண்டா்கள், தமிழக மக்கள் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும்.

வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ளவே வடமாநிலத் தொழிலாளா்கள் இங்கு பணிபுரிகிறாா்கள். ஆனால், அவா்களது வாக்குரிமை அவரவா்கள் பிறந்த மாநிலங்களில்தான் இருக்க வேண்டும். இன்றைக்கு தமிழ்நாட்டில் அவா்களுக்கு வாக்குரிமை அளித்தால் தவறான முன்னுதாரணமாக மாறிவிடும். இதற்கு என்றைக்கும் தேமுதிக துணை நிற்காது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. இதற்கு அரசு மதுபானக் கடை, கள்ளச்சாராயம், போதைப் பொருட்களே காரணம், என்றாா்.

X
Dinamani
www.dinamani.com