மூதாட்டியைக் கொன்ற புலி அகப்படாததால் கால்நடைகளை மேய்க்க முடியாமல் தவிப்பு!

Published on

கூடலூா் அருகே மூதாட்டியைக் கொன்ற புலி சிக்காததால் ஆடு, மாடுகளை மேய்க்கச் செல்ல முடியாமல் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

நீலகிரி மாவட்டம் கூடலூா் அருகே உள்ள மாவனல்லா பகுதியில் கடந்த 24-ஆம் தேதி புலி தாக்கி நாகியம்மாள் என்ற பழங்குடியின மூதாட்டி உயிரிழந்தாா். இதையடுத்து, அப்பகுதியில் சுற்றித்திரியும் டி-37 என்ற புலியைப் பிடிக்க 5 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டதுடன், 4 தனி குழுக்கள் அமைத்து புலியின் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

இருப்பினும் மூதாட்டியைக் கொன்ற புலி கூண்டுக்குள் அகப்படாமல் இருப்பதால், இப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்து வாழ்வாதாரத்தை ஈட்டிவரும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே புலியைப் பிடிக்க வனத் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com