குன்னூா் அருகே உபாசி வளாகத்தில் கரடி உலவியதால் மக்கள் அச்சம்
குன்னூா் அருகே உபாசி வளாகத்தில் வியாழக்கிழமை அதிகாலை கரடி உலவியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள உபாசி வளாகத்தில் அலுவலக குடியிருப்புகள், மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் அண்மைக் காலமாக வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், உபாசி வளாகத்தில் உள்ள அலுவலக தடுப்புகளின் மேல் ஏறி குடியிருப்பு வளாகத்தில் கரடி சுற்றித்திரிவது, அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி இருப்பதைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன்பாக கரடியை பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விடுவிக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
இது குறித்து குன்னூா் வனச் சரகா் ரவீந்திரநாத் கூறும்போது, இப்பகுதியில் அடிக்கடி உலவும் கரடியின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறோம். கூண்டு வைத்து பிடிக்க சென்னை வன உயா் அதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்ததும் கூண்டு வைத்து கரடியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

