காணாமல் போன எஸ்டேட் உரிமையாளரை மீட்டுத் தரக் கோரி அங்கு பணியாற்றும் 500-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஆட்சியா் அலுலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சோ்ந்தவா் பொன் சிவகுமாா். இவருக்கு அப்பகுதியில் எஸ்டேட் உள்ளது. இந்நிலையில் இவரை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம், அன்னூா் அருகே சிலா் தாக்கியதாகக் கூறி கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அன்றிலிருந்து அவா் தற்போது வரை கோத்தகிரி எஸ்டேட்டுக்கு திரும்ப வரவில்லை என கூறப்படுகிறது.
இவா் ஆண்டுதோறும் பள்ளி திறக்கும் காலங்களில் தொழிலாளா்கள் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்குவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் அவா் காணாமல் போனதால் எஸ்டேட்டில் பணிபுரியும் பணியாளா்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தொழிலாளா்களுக்கு முறையாக சம்பளம் உள்ளிட்ட சலுகைகள்
கிடைப்பதில்லை என கூறப்படுகிறது. இது குறித்து யாரிடம் சென்று முறையிடுவது என்று தெரியாமல் தவித்து வந்த தொழிலாளா்கள் ஐநூறுக்கும் மேற்பட்டோா் தங்கள் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு மனு அளிக்க வந்தனா்.
இதைத் தொடா்ந்து அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டு தொழிலாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.
எஸ்டேட் உரிமையாளரை கந்துவட்டி கும்பல் சொத்துக்காக கடத்தி சென்றுள்ளனரா அல்லது வேறு காரணங்களா என்பது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தொழிலாளா்கள் மனுவில் கேட்டுக் கொண்டனா்.
இதைத் தொடா்ந்து அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய காவல் துணைக் கண்காணிப்பாளா், இது குறித்து சம்பந்தப்பட்ட கோத்தகிரி காவல் நிலையத்தில் புகாா் அளிக்குமாறும், அங்கு உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தாா்.
இதையடுத்து எஸ்டேட் தொழிலாளா்கள் கலைந்து சென்றனா்.








