உடுமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் இடைத்தரகர்கள் ஆதிக்கம்: பத்திர எழுத்தாளர்கள் குற்றச்சாட்டு

உடுமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் உள்ளதாக பத்திர எழுத்தாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
Updated on
1 min read

உடுமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் உள்ளதாக பத்திர எழுத்தாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
உடுமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இங்கு 25- க்கும் மேற்பட்ட பத்திர எழுத்தர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பத்திரப் பதிவு அலுவலகத்தில் நிர்வாக சீர்கேடுகள் ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக பதிவாகும் பத்திரங்கள் மற்றும் சான்றுகளை பொதுமக்களுக்கு காலம் தாழ்த்தி வழங்கப்பட்டு வருவாகவும்,  இதனால் பொதுமக்கள் அலைக்கழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் புகார்கள் கூறப்படுகின்றன.  அவசரம் மற்றும் அவசியத் தேவைக்காக பத்திரங்களை பெறுவதற்காக பொதுமக்கள் கூடுதல் தொகை கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக கூறப்படுகிறது.   இதைப் பயன்படுத்தி இடைத்தரகர்கள் ஆதாயம் அடைந்து வருவதாக பத்திர எழுத்தாளர்கள் உயர் அதிகாரிகளுக்கு புகார்களை அனுப்பி
வருகின்றனர்.
இதுகுறித்து பத்திர எழுத்தாளர்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கணினி வில்லங்க சான்று விண்ணப்பிக்கும்போதே வழங்கப்பட வேண்டும். ஆனால் தற்போது 5 நாள்கள் ஆகிறது.  ஆனால், அலுவலர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கூடுதல் தொகை கொடுத்தால் ஒரே நாளில் கிடைத்து விடுகின்றது.
பொதுமக்கள் விண்ணப்பிக்கும் எந்த  மனுவுக்கும் ரசீது கொடுக்கப்படுவதில்லை. குறிப்பாக பதியப்படும் பத்திரங்களைப் பெற 15 நாள்களுக்கு மேல் பொதுமக்களை இழுத்தடிக்கின்றனர்.
இதை பயன்படுத்திக் கொண்டு கூடுதல் தொகைகள் கை மாறுகிறது. இதுபோன்ற நிர்வாக சீர்கேடுகளை தவிர்க்கவும்,  இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரவும் ஆன்லைன் பதிவு கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் உடுமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் வேண்டுமென்றே அதை நடை முறைப்படுத்த காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது என்றனர்.
இந்நிலையில் நிர்வாக சீர்கேடுகளை தவிர்க்க ஆன்லைன் பத்திரப் பதிவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனக் கோரி பத்திர எழுத்தாளர் சிவசங்கர்  உள்ளிட்டோர் சார் பதிவாளர் வசுந்திராதேவியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர். இந்த மனு உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சார் பதிவாளர் வசுந்திராதேவி கூறியதாவது:
இடைத்தரகர்கள் ஆதிக்கம் என்பது பொய்யான குற்றச்சாட்டு. ஒரு சிலர் வேண்டுமென்றே இது மாதிரியான குற்றச்சாட்டுகளை கூறி பிரச்னைகளை உருவாக்கி வருகின்றனர். ஆன்லைன் பத்திரப் பதிவு கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது உண்மைதான்.  ஆன்லைன் பதிவில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் சிறிது, சிறிதாகத்தான் அதை நடைமுறைப்படுத்த முடியும்.  தற்போது ஒரு நாளைக்கு சுமார் 10 பத்திரங்கள் ஆன்லைனில் பதியப்பட்டு வருகின்றன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com