திருப்பூரில் நிட்ஷோ கண்காட்சி துவங்கியது: வெளிநாட்டு நவீன இயந்திரங்கள் அணிவகுப்பு
திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான பல்வேறு நாடுகளின் நவீன இயந்திரங்கள் இடம்பெற்றுள்ள "நிட்ஷோ' பின்னலாடைக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான பல்வேறு நாடுகளின் நவீன இயந்திரங்கள் இடம்பெற்றுள்ள "நிட்ஷோ' பின்னலாடைக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
சிட்டி லீவ்ஸ் நிறுவனம் சார்பில் 18ஆவது பின்னலாடைக் கண்காட்சி, திருப்பூர் வேலன் ஹோட்டல்- மான்செஸ்டர் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
கண்காட்சியை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
எம்.எல்.ஏ.க்கள் சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), நடராஜ் (பல்லடம்), திருப்பூர் பின்னாலடை ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம், ஆயத்த ஆடை ஏற்றுமதிக் கழகத் தலைவர் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கண்காட்சி குறித்து சிட்டி லீவ்ஸ் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணா கூறியதாவது:
திருப்பூர் பின்னலாடைத் துறையின் வளர்ச்சிக்கு தொழில்நுட்ப மேம்பாடு மிகவும் அவசியம். அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள நிறுவனங்கள் ஆடைத் தயாரிப்புத் துறைக்கான அதிநவீன இயந்திரங்களைத் தயாரித்து சந்தைப்படுத்தி வருகின்றன்.
புதிய தொழில்நுட்பங்களை எளிதாகக் கண்டறிந்து, நவீன இயந்திரங்களை நிறுவுவதற்கு நிட்ஷோ பின்னலாடைக் கண்காட்சி கைகொடுக்கிறது.
திருப்பூரில் ஆடை உற்பத்தித் துறையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு சிட்டி லீவ்ஸ் நிறுவனம் கடந்த 2000ஆவது ஆண்டு முதல் நிட்ஷோ என்ற பெயரில் பின்னலாடை இயந்திரக் கண்காட்சியை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு கண்காட்சியில் கடந்த ஆண்டைவிடவும் 10 சதவீத கூடுதல் பரப்பளவில் 520 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பியாவைச் சேர்ந்த எம் அண்ட் ஆர், எம்.எச்.எம்., போர்ச்சுக்கல் நாட்டு எஸ்ராக், கே.டி.கே., கொரியாவைச் சேர்ந்த சேரன் நிறுவனங்கள் நவீன பிரின்டிங் இயந்திரங்களைக் காட்சிப்படுத்தியுள்ளன. ஓவல் பிரின்டிங் இயந்திரங்கள் அதிக அளவில் இடம் பெறுகின்றன.
கோவையைச் சேர்ந்த ஆர்.வி.ஆர். நிறுவனம் ஆடைத் தயாரிப்புத் துறைக்கான 12 வகையான இயந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஷிருபா, பிரதர், ஜூகி, ஜாக் நிறுவனங்களின் புதுவகை தையல் இயந்திரங்கள் இடம் பெற்றுள்ளன. உள்நாட்டைச் சேர்ந்த மார்வெல், சகாய் ஆட்டோமேஷன் நிறுவனங்கள், வெளிநாட்டு இயந்திரங்களுக்கு நிகரான அதே தரத்தில் தயாரிக்கப்பட்ட அதிநவீன டையிங் இயந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
மேலும், இயந்திர உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் அரங்குகளும் இடம்பெற்றுள்ளன. மூன்று நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை செவ்வாய்க்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை பின்னலாடைத் தொழில் துறையினர் உள்ளிட்டோர் பார்வையிடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

