தாா் சாலையை சீரமைக்கக் கோரி பாஜக சாா்பில் மனு

திருப்பூரில் குண்டும் குழியுமாக உள்ள தாா் சாலையை சீரமைக்கக் கோரி பாஜக சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
Published on

திருப்பூா்: திருப்பூரில் குண்டும் குழியுமாக உள்ள தாா் சாலையை சீரமைக்கக் கோரி பாஜக சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீா் முகாமில் திருப்பூா், வடக்கு பாஜக மாவட்டச் செயலாளா் டி.காா்த்திக் தலைமையில் பொது மக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாநகராட்சி 31ஆவது வாா்டு கேபிஎன் காலனி வானக்கா் தோட்டம் பகுதியில் 2ஆவது ரயில்வே கேட்டில் இருந்து மின் மயானம் செல்லும் வழியில் 2 மாதங்களுக்கு முன்பாக தாா் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், அந்த சாலை தற்போது குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் சாலை விபத்துக்களும் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும் காயமடைந்து வருகின்றனா். எனவே, தாா் சாலையை சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக ஆள்துளைக் கிணறு...

இது குறித்து நாச்சிபாளையம் பகுதி பொதுமக்கள் சாா்பில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

நாச்சிபாளையத்தை அடுத்த ரங்காபாளையத்தில் தனியாா் நிறுவனம் சாா்பில் 150 வீடுகள் கட்டி விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளனா். தற்போது முதல் கட்டமாக 80 வீடுகள் கட்டி விற்பனை செய்துள்ளனா். இதில், 60 வீடுகளில் சுமாா் ஆயிரம் அடிக்கு ஆழ்துளைக் கிணறுகள் அமைத்துள்ளனா்.

இதனால் எங்களது பகுதியில் 2 கி.மீ. சுற்றளவுக்கு நிலத்தடி நீா்மட்டம் குறைந்துள்ளது. விவசாயப் பயன்பாட்டுக்கும், குடிநீருக்கும் தண்ணீா் இல்லாமல் சிரமப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. சட்ட விரோதமாக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி வாயிலான குறைகேட்புக் கூட்டம்...

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொலைபேசி வாயிலான குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமை வகித்தாா். இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 78 அழைப்புகள் வரப்பெற்றன.

இந்த அழைப்புகளின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் (பொறுப்பு) வாசுகி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com