தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மர சிற்பங்களுக்குப் புவிசார் குறியீடு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மரச் சிற்பங்களுக்குப் புவிசார் குறியீடு திங்கள்கிழமை இரவு கிடைத்தது.
தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மர சிற்பங்களுக்குப் புவிசார் குறியீடு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மரச் சிற்பங்களுக்குப் புவிசார் குறியீடு திங்கள்கிழமை இரவு கிடைத்தது.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் ஓவியம் போன்றவற்றின் வரிசையில் தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடும் ஒன்று. தஞ்சாவூர் நெட்டி வேலைக்குத் தனிச் சிறப்பு உள்ளது. நினைவு பரிசாக வழங்குவதற்கும், வீட்டில் அலங்காரப் பொருள்களாக வைப்பதற்கும் பயன்படும் இந்த நெட்டிக் கலை மிகவும் பழைமையானது. இந்தக் கலையில் ஈடுபட்ட கலைஞர்களுக்கு சரபோஜி மன்னர் காலத்தில் மானியங்கள் கொடுக்கப்பட்டன. தஞ்சாவூர் நெட்டி என்பது தண்ணீரில் விளையும் ஒரு வித செடி வகையைச் சேர்ந்தது. தஞ்சாவூரில் உள்ள குளம், ஏரியில் விளைகிறது. 

இதனுடைய நடுபாகம் தாமரை தண்டு போன்று நீளமாகவும் மேல் பகுதி சிறு சிறு கிளைகளாகவும் இருக்கும். கிளைகளில் செல்லி இலைகள் போன்று காணப்படும். இந்த நெட்டி டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தேவையான அளவில் கிடைக்கிறது. இதை வெயிலில் உலர்த்தி பதப்படுத்தப்படுகிறது. நெட்டியின் மேல் தோலில் சிறு சிறு வேர்கள் காணப்படும். நெட்டியின் நடுப்பகுதியில் ஒரு நீளமான துவாரம் காணப்படும். தோலுக்கும், துவாரத்துக்கும் இடைப்பட்ட பகுதி தந்தத்தைப்போல காணப்படும் இதை நெட்டி என்றும், சடை என்றும், பித்து (பெண்டு என்றும் கூறுவர். 

இத்தகைய நெட்டியில் கோவில் அமைப்புகள், உருவ அமைப்புகள் இயற்கை காட்சிகள், கட்டட அமைப்புகள், வாழ்த்து மடல்கள் போன்றவை செய்யப்படுகின்றன. இதில், தஞ்சாவூர் பெரியகோயில் அமைப்பு மிகவும் புகழ்பெற்றது. மேலும், மாமல்லபுரம் கடற்கரை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், விவேகானந்தர் பாறை, திருச்சி மலைக்கோட்டை போன்றவை மட்டுமல்லாமல், இறை உருவ அமைப்புகளும் தந்துரூபமாக உருவாக்கப்படுகின்றன. நெட்டியில் செய்யப்படும் கலைப் பொருள்கள் தந்தத்தில் செய்யப்பட்டவை போன்று வெண்மையாகவும், அனைவரையும் கவரும் வகையிலும் உள்ளது. இந்த நெட்டி வேலையை தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மிகச் சிலரே செய்து வருகின்றனர்.

தற்போது, இந்த நெட்டி வேலைப்பாடுக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திலுள்ள அரும்பாவூர் கிராமத்தில் தயாரிக்கப்படும் மரச்சிற்பம் உலகப்புகழ் பெற்றது. இந்த மரச்சிற்பத்துக்கு 250 ஆண்டுகளுக்கு முன்பே பழைமையான வரலாற்று சிறப்பு உள்ளது. இந்தப் பகுதியில் வாழ்கிற போயர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் இக்கலையில் சிறந்து விளங்குகின்றனர். இவர்களின் முதன்மையான பணி தேர் செய்யும் தொழில். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், அவிநாசி, வட பழநி, ஆவுடையார்கோவில், விராலிமலை, திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் கோயில் என தமிழகத்தின் பல புகழ்பெற்ற கோயில்களின் தேர்களைச் செய்தவர்கள் இந்த மரச்சிற்பிகளே.

தேரின் உயரத்துக்கு ஏற்ப 5 முதல் 7 பேர் வரை அந்த பகுதிக்கே சென்று மாதக் கணக்கில் தங்கிப் பணி முடித்து வெள்ளோட்டம் பார்த்துவிட்டுத்தான் ஊர் திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கோயில் கொடிமரம் செய்வதிலும் இதே நடைமுறையைக் கையாள்கின்றனர். இத்தகைய மரவேலைப்பாடுக்கு தேக்கு, மாவிலகை, பூவாகம், வேம்பு, மா, அத்தி, ரோஸ்வுட் போன்ற மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து விதமான இறை உருவங்கள், தேர்கள், கொடி மரம், வெள்ளெருக்கில் செய்யப்படும் விநாயகர், ராமர் பாதம் போன்றவை மிகவும் புகழ் பெற்றவை. இறை உருவம் மற்றும் தேர் வேலைகள் செய்யும்போது இவர்கள் அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் இருந்து மேற்கொள்கின்றனர். இத்தகைய சிற்பங்கள் 1 அடி முதல் 12 அடி வரை செய்யப்படுகின்றன. 

அமெரிக்கா, ஆஸ்திரேலியா இங்கிலாந்து ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் அரும்பாவூர் மர வேலைப்பாடுகள் விரும்பி வாங்கப்படுகின்றன. இந்த அரும்பாவூர் மர வேலைப்பாடுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. கைவினைப் பொருள்களுக்குப் புவிசார் குறியீடு பெற்று தர முயற்சி செய்து வரும் அறிவுசார் சொத்துரிமை வழக்குரைஞர் சங்கத் தலைவர் ப. சஞ்சய்காந்தி தெரிவித்தது; ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய சிறப்பு மிக்க 23 கைவினைப் பெருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மரவேலைப்பாடுக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து கிடைத்துள்ளது.

பூம்புகார் சார்பில் 2013 ஆம் ஆண்டு இதற்காக விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டு, 2014 ஆம் ஆண்டு புதுதில்லியில் 7 நபர்களைக் கொண்ட புவிசார் குறியீடு வல்லுநர் குழு முன் ஆஜராகி வாதாடினேன். தொடர்ந்து பல்வேறு சட்டப்பணிகளை மேற்கொண்டு 2020, ஜன. 10-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. தற்போது இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார் சஞ்சய் காந்தி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com