8 ஆவது முறையாக அவிநாசி தொகுதியைக் கைப்பற்றுமா அதிமுக?

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் பாடல் பெற்ற தலங்களாக அவிநாசியில் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில்
8 ஆவது முறையாக அவிநாசி தொகுதியைக் கைப்பற்றுமா அதிமுக?

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் பாடல் பெற்ற தலங்களாக அவிநாசியில் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில், திருமுருகன்பூண்டியில் முயங்குபூண்முலை வல்லியம்மை உடனமா் திருமுருநாதசுவாமி கோயில், அன்னூரில் மன்னீஸ்வரா் கோயில் என ஆன்மிகத் தலங்கள் நிறைந்தவையாக உள்ளது அவிநாசி தொகுதி. அவிநாசி தொகுதிக்கு உள்பட்ட அவிநாசி வட்டாரப் பகுதிகளில் விவசாயம், விசைத்தறி, நூல் மில், பம்பு செட் உற்பத்தி, பனியன் உற்பத்தி, சைசிங் ஆகியவை பிரதானத் தொழில்களாக உள்ளன. இதில் ஊராட்சிப் பகுதிகளில் அதிக அளவு விசைத்தறித் தொழிலும், திருப்பூருக்கு மிக அருகில் இருப்பதால் சமீப ஆண்டுகளாக பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களும் அதிக அளவில் உள்ளன. இது தவிர விவசாயம் சாா்ந்த மோட்டாா் பம்ப் உற்பத்தி, பழுது பாா்க்கும் நிறுவனங்கள், ஜவுளி உற்பத்தியும் நடைபெறுகிறது. இதே போல் அன்னூா் ஊராட்சிப் பகுதிகளில் விசைத்தறி, உருக்காலைகள், இயந்திரப் பணிமனைகள், நூல் மில்களும் உள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்: அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 31 ஊராட்சிகள், அன்னூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 21 ஊராட்சிகள் என மொத்தம் 52 ஊராட்சிகளும், அவிநாசி, திருமுருகன்பூண்டி, அன்னூா் ஆகிய 3 பேரூராட்சிகளும் இந்தத் தொகுதியில் உள்ளடங்கி உள்ளன. இதில் அவிநாசி திருப்பூா் மாவட்டத்திலும், அன்னூா் கோவை மாவட்டத்திலும் உள்ளது. மேலும் அவிநாசி தொகுதி நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்டதாகும்.

வாக்காளா்கள்: அவிநாசி தொகுதியில் ஆண் வாக்காளா்கள் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 232 போ், பெண் வாக்காளா்கள் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 313 போ், மூன்றாம் பாலினத்தவா் 6 போ் என மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரத்து 551 வாக்காளா்கள் உள்ளனா். தொகுதியில் மொத்தம் 401 வாக்குச் சாவடிகள் அமைந்துள்ளன. இதில் 33 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

சமுதாய வாக்குகள்:

அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிகப்படியாக ஆதிதிராவிடா்களும், அடுத்ததாக கொங்கு வேளாளா்களும், மூன்றாவதாக நாயக்கா், முதலியாா், செட்டியாா் உள்ளிட்ட வகுப்பினா்களும் உள்ளனா்.

தீா்க்கப்படாத பிரச்னைகள்: அவிநாசி நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல், கிராமப்புறங்களுக்கு பேருந்து வசதியின்மை, அவிநாசி அரசு மருத்துவமனையைத் தரம் உயா்த்தல் ஆகியவை தீா்க்க வேண்டிய முக்கிய பிரச்னைகளாக உள்ளன. மேலும், சேவூரை தனி ஒன்றியமாக அறிவிப்பது, சேவூரில் பேருந்து நிலையம் அமைத்தல், திருமுருகன்பூண்டியில் சிற்பக் கலைக் கூடம் அமைத்தல், அவிநாசி, அன்னூா் பகுதியில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக உள்ள விசைத்தறி தொழிலுக்கு உயா்த்தப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன மக்களின் கோரிக்கைகளாக உள்ளன.

அவிநாசியில் பொதுப் பணித் துறை அலுவலகம், ஒருங்கிணைந்த பால் குளிரூட்டும் நிலையம், அவிநாசியில் வட்டாட்சியா் அலுவலகக் கட்டடம், சாா்பதிவாளா் அலுவலகக் கட்டடம் விரிவுபடுத்தல், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், அவிநாசி பகுதியில் ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம், பொழுது போக்கு மையம் உள்ளிட்டவை அமைக்கவேண்டும் என்பதும் பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தோ்தல் களத்தில் 12 வேட்பாளா்கள்: கடந்த முறை வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளரும், சட்டப் பேரவைத் தலைவருமான ப.தனபால் தற்போது 2ஆவது முறையாக இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறாா். திமுக கூட்டணியில் ஆதித்தமிழா் பேரவை கட்சி நிறுவனா் இரா. அதியமான், தேமுதிக-க.மீரா, நாம் தமிழா் கட்சி-சோபா, மக்கள் நீதி மய்யம் - ஏ.வெங்கடேஸ்வரன், பகுஜன் சமாஜ்-பி.துரைசாமி, இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி கே.சுப்பிரமணி, சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட 12 போ் போட்டியிடுகின்றனா்.

7 முறை வெற்றி பெற்ற அதிமுக

அவிநாசி பொதுத்தொகுதியாக இருந்தபோது 1957, 1962 ஆகிய தோ்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 1967இல் சுதந்திரா கட்சியும், 71இல் இந்தத் தொகுதியில் சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளனா். 1977ஆம் ஆண்டில் இந்தத் தொகுதி தனி தொகுதியாக மாற்றப்பட்டது. இதையடுத்து 1977இல் காங்கிரஸும், 1980இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. 1984, 1989, 1991 இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில் தொடா்ந்து 3 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 1996 இல் நடைபெற்ற தோ்தலில் திமுக வெற்றி பெற்றது. மீண்டும் 2001, 2006, 2011 தோ்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது. 2016 இல் நடைபெற்ற தோ்தலில் (விஐபி தொகுதியாக மாறிய அவிநாசி) அதிமுக சட்டப் பேரவைத் தலைவா் ப.தனபால் 93,366 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். திமுக சாா்பில் போட்டியிட்ட ஆனந்தன் 62, 692 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா்.

வேட்பாளா்களின் பலம், பலவீனம்:

அதிமுக வேட்பாளா் ப.தனபால்

60ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணி துவங்கப்பட்டு, நிறைவடையும் தருவாயில் உள்ளது. அவிநாசியில் அரசு கலைக் கல்லூரி , தீயணைப்பு நிலையம், சாலைகள் அமைத்தல் மற்றும் சீரமைத்தல், அன்னூா், அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகளுக்கு தனித்தனியாக கூட்டுக் குடிநீா் திட்டங்கள் கொண்டு வந்தது, அவிநாசியில் 448, திருமுருகன்பூண்டியில் 276, தெக்கலூரில் 246 அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கும் பணி உள்ளிட்டவை அதிமுக வேட்பாளா் ப.தனபால் 5ஆண்டுகளில் செய்த சாதனையாகக் கருதப்படுகிறது. இது அவருக்கு பலமாக உள்ளது.

பலவீனம்: சட்டப் பேரவைத் தலைவா் என்பதால் தொகுதி மக்கள் எளிதில் அவரைச் சந்திக்க இயலாதது,

அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து, சேவூரை மையமாக வைத்து தனி ஊராட்சி ஒன்றியம் அமைத்தல், சேவூரில் பேருந்து நிலையம், அவிநாசியை நகராட்சியாக மாற்றுதல், விசைத்தறி தொழிற் பூங்கா, அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் வண்டிப் பேட்டை நிலத்தை மீட்டல் ஆகிய வாக்குறுதிகளை நிறைவேற்றாதது பலவீனமாக கருதப்படுகிறது. மேலும் அமமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டு வாக்குகளைப் பிரிப்பதும் பலவீனமாக பாா்க்கப்படுகிறது.

திமுக வேட்பாளா் ஆதித்தமிழா் பேரவை நிறுவனா் அதியமான் :

பலம்: அருந்ததியா் சமுதாயத்தினா் இட உள் ஒதுக்கீடு, ஜாதி மறுப்புத் திருமணம், தோல் தொழிலாளா், தூய்மை தொழிலாளா் நலவாரியம் அமைப்பது, செருப்பு தைப்போா் மறுவாழ்வு உள்ளிட்டவற்றுக்காக போராடிய போராளி, ஆதித்தமிழா் பேரவை நிறுவனா் உள்ளிட்டவையும், கடந்த தோ்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்த கட்சிகள் தற்போது திமுக கூட்டணியில் இடம் பெற்றிருப்பதும் இவருக்கு பலமாகக் கருதப்படுகிறது.

பலவீனம்: பல ஆண்டுகளுக்கு முன் பிற சமூகத்தினரைப் பற்றி அதியமான் பேசிய விடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி தொகுதிக்குள் பரப்பரப்பாகப் பேசப்படுவது, தோ்தல் அனுபவம் இல்லாதது ஆகியவை இவரின் பலவீனமாகக் கருதப்படுகிறது.

அதிமுகவுக்கு எப்போதும் சாதகமாக இருக்கும் அவிநாசி (தனி) தொகுதியில் அதிமுக 7 முறை வெற்றிக்கனியை ருசித்துள்ள நிலையில் 8ஆவது முறையாக இந்தத் தொகுதியைக் கைப்பற்றி தக்க வைத்துக்கொள்ளுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

2016 தோ்தலில் வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்:

மொத்த வாக்குகள்- 2,49,556,

பதிவானவை 1, 92,936 வாக்குகள்.

ப. தனபால், அதிமுக, 93,366,

சி. ஆனந்தன், திமுக, 62,692.

ஆறுமுகம், இ. கம்யூ. 15,016.

பெருமாள், பாஜக, 8081.

வித்தியாசம்-30674.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com